‘நீங்க டெல்டாக்காரர் தான்.. அப்பறம் எதுக்கு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தீங்க’ : CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 6:17 pm

கடந்த திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த விவகாரம் சட்டப்பேரவையில் இன்று எழுப்பப்பட்டது. அப்போது, பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சர் என்ற முறையில் இல்லாமல், தானொரு டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையில் நிலக்கரி சுரங்க திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- நிலக்கரி சுரங்கத்திற்கு மத்திய அரசு தேர்வு செய்துள்ள 101 இடங்களில் 3 இடங்களில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே என்எல்சி நிறுவனம் 105 கிராமங்களை எடுத்துவிட்டது. அந்த பொன் விளைகின்ற பூமிகள் எல்லாம் அழியக்கூடிய சூழ்நிலை. இது விவசாயிகள் மத்தியில் மிக மிக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நாங்கள் அறிவித்தோம். தமிழ்நாட்டின் உணவுத் தேவைகளை டெல்டா மாவட்டம் பூர்த்தி செய்கிறது. அப்படி இருக்கின்ற போது மத்திய அரசாங்கம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது விவசாயிகளிடத்திலே வேதனையையும், வருத்தத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்காமல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.

இதே டெல்டா காரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்திற்கு புரிந்துணர் ஒப்பந்தம் போட்டார். பொன் விளையும் பூமியை பாதுகாத்தது அதிமுக. நாங்கள் கொண்டு வந்து அமல்படுத்திய திட்டத்தை சட்டத்தை பாதுகாத்தால் போதும். சட்டசபையில் பேசி எந்த பிரயோஜனம் இல்லை. நாடாளுமன்றத்தில் பேசணும். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க துப்பில்லை. தெம்பு திராணி இல்லை, என்றார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ