யார் மரபை மீறியது…? கொலை, கொள்ளைகளில் திளைக்கும் தமிழகம் அமைதி பூங்காவா..? திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 2:30 pm

சட்டப்பேரவையில் ஆளுநர் மரபை மீறியதாக திமுகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியதும், அதனை எதிர்த்து கூட்டணி கட்சிகள் கூச்சல் எழுப்பினர். அமளியில் ஈடுபட்டனர். பின்னர், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து உரையாற்றினார். அதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஆளுநர் தனது உரையில், திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளார். இதற்கு உடனே கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. அரசு தயாரித்த ஆளுநர் உரையை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும், எனக் கூறினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். அதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- ஆளுநர் உரை சம்பிரதாய முறைப்படி அறிவிக்கப்படும் ஒரு உரை. ஆனால், ஆளுநர் உரையில் பெரிய திட்டங்கள் இடம்பெறவில்லை. பொதுமக்கள் குற்றச்சாட்டை நீடிக்கும் வகையில் தற்புகழ்ச்சியோடு ஆளுநர் உரை இருக்கிறது. வெற்று உரையாக உள்ள ஆளுநர் உரையால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது.

மாநிலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் தங்கு தடை இல்லாமல் கிடைக்கிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு எல்லாம் போதைப் பொருள் கடத்தப்படுகிறது, எனக் கூறினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!