திமுக கவுன்சிலர்களால் இரு அப்பாவிகள் தற்கொலை… என்ன பதில் சொல்லப் போறீங்க முதலமைச்சரே..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!

Author: Babu Lakshmanan
14 May 2022, 8:00 pm

சென்னை : திமுக கவுன்சிலர்களால் இரு அப்பாவி தமிழர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்….? என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஈரோடு, முல்லை நகரைச்‌ சேர்ந்த திரு. ராதாகிருஷ்ணன்‌ என்ற நூல்‌ வியாபாரி தனது மனைவி மற்றும்‌ குடும்பத்தினருடன்‌ வசித்து வருவதாகவும்‌, இவர்‌ ஈரோடு கருங்கல்பாளையத்தில்‌ கள்ள லாட்டரி விற்பனை செய்துவரும்‌, ஈரோடு மாநகராட்சி 39-ஆவது வார்டு திமுக கவுன்சிலர்‌ திருமதி கீதாஞ்சலி என்பவரின்‌ கணவர் செந்தில்குமாரிடம்‌ லாட்டரிச்‌ சீட்டு வாங்கி வருபவர்‌ என்றும்‌, இதனால்‌, இதுவரை தன்னுடைய 62 லட்சம்‌ ரூபாயை இழந்துள்ளதாகவும்‌, தான்‌ உயிருடன்‌ இருந்தால்‌, இன்னும்‌ பணத்தை இழந்துவிட நேரிடும்‌ என்பதால்‌, தான்‌ தற்கொலை செய்து கொள்வதாகவும்‌, பல குடும்பங்கள்‌ இந்த கள்ள லாட்டரி விற்பனையால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாகவும்‌ வீடியோ ஒன்றில்‌ அவர்‌ தற்கொலை செய்துகொள்ளும்‌ முன்பு பேசியுள்ளதாகவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன.

காவல்‌ துறைக்கு தெரியாமல்‌ ஈரோடு மாநகரின்‌ மையப்‌ பகுதியில்‌ இந்த லாட்டரி விற்பனை நடக்க சாத்தியமே இல்லை. இதுபோல்‌ எத்தனை பேர்‌ இந்த கள்ள லாட்டரிகளை வாங்கி, தங்கள்‌ பணத்தை இழந்து நடுத்‌ தெருவிற்கு வந்திருப்பார்கள்‌ என்பது கடவுளுக்கே வெளிச்சம்‌. ஆனால்‌, வெளிப்படையாக நடந்து வரும்‌ இந்த
கள்ள லாட்டரி விற்பனையைத்‌ தடுக்க இதுவரை காவல்‌ துறை எந்தவிதமான நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை என்பது மிகவும்‌ வேதனைக்குறியது; கண்டனத்துக்குறியது.

தனது கணவர்‌ தற்கொலை செய்துகொண்டது குறித்து ராதாகிருஷ்ணணின்‌ மனைவி காவல்‌ துறையில்‌ புகார்‌ அளித்துள்ளார்‌. மாண்புமிகு அம்மாவின்‌ ஆட்சியில்‌, மக்களை உயிரோடு மண்ணில்‌ புதைக்கும்‌
லாட்டரி அறவே ஒழிக்கப்பட்டது. எங்கள்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌, லாட்டரி சீட்டுகள்‌ கள்ளத்தனமாக விற்கப்படுவதை காவல்‌ துறை இரும்புக்‌ கரம்‌ கொண்டு தடுத்தது. அதே காவல்‌ துறைதான்‌ இப்போதும்‌ உள்ளது. ஆனால்‌, லாட்டரிச்‌ சீட்டு
அதிபர்களுடன்‌ சேர்ந்து கள்ள லாட்டரி விற்பவர்கள்‌, திமுக நிர்வாகிகள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌. இவர்கள்‌ மீது எப்படி இந்த விடியா அரசின்‌ காவல்‌ துறை தைரியமாக நடவடிக்கை எடுக்க முடியும்‌. காவல்‌ துறையை தன்வசம்‌ வைத்துள்ள முதலமைச்சர்‌ இதற்கு பதில்‌ அளிப்பாரா ?

இரண்டாவது சம்பவத்தில்‌, வேலூர்‌ மவட்டம்‌, ஒடுக்கத்தூரை அடுத்த ராமநாயினிகுப்பம்‌ கிராம ஊராட்சி செயலாளராகப்‌ பணியாற்றிவர்‌ திரு. ராஜசேகர்‌. இவர்‌, நேற்று இரவு ஒரு கடிதம்‌ எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌. அக்கடிதத்தில்‌ தனது தற்கொலைக்குக்‌ காரணம்‌ திமுக ஒன்றியக்‌ கவுன்சிலர்‌ திரு. அரி என்பவர்தான்‌ என்றும்‌, வேறு யாரும்‌ இல்லை என்றும்‌, ஊராட்சிக்கு வரும்‌ நிதி முழுவதையும்‌ தனக்குதான்‌ வழங்க வேண்டும்‌ என்றும்‌ தொடர்ந்து வற்புறுத்துவதாகவும்‌ அக்கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌ என்று செய்திகள்‌
தெரிவிக்கின்றன.

மேலும்‌, தனது தம்பிக்கு ரேஷன்‌ கடையில்‌ வேலை வாங்கித்‌ தருவதாக பல லட்சம்‌ ரூபாய்‌ பணம்‌ பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்‌ தராமல்‌ கவுன்சிலர்‌ அரி தன்னை அலைக்கழித்து மிரட்டுவதாகவும்‌ அக்கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.
தற்கொலை செய்துகொண்ட ராஜசேகரின்‌ உறவினர்கள்‌ இது குறித்து காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ அளித்துள்ளதாகச்‌ செய்திகள்‌ கூறுகின்றன. தங்கள்‌ தற்கொலைக்கு திமுக கவுன்சிலர்கள்‌ தான்‌ காரணம்‌ என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டு, இரண்டு அப்பாவிகள்‌ தங்கள்‌ உயிர்களை மாய்த்துக்‌ கொண்டுள்ளனர்‌.

சட்டமன்றத்தில்‌ உள்துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது, 9.5.2022 அன்று‘ நான்‌ பேசியதற்கு பதில்‌ அளித்து 10.5.2022 அன்று பேசிய இந்த விடியா அரசின்‌ முதலமைச்சர்‌, “எவ்வித அரசியல்‌ குறுக்கீடுகளும்‌ இல்லாமல்‌ காவல்‌ துறை சுதந்திரமாக செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறது என்றும்‌, சட்டத்தின்‌ முன்‌ அனைவரும்‌ சமம்‌ என்ற கோட்பாடு நிலைநாட்டப்பட்டுள்ளது. என்றும்‌, மேலும்‌ குற்றங்களை தடுப்பதுதான்‌ அரசின்‌ நோக்கம்‌” என்றும்‌ பதில்‌ அளித்துள்ளார்‌.

ஆனால்‌, மாநிலம்‌ முழுவதும்‌ சமூக விரோதிகள்‌ லாட்டரி விற்பனையில்‌ ஈடுபட்டு, லட்சக்கணக்கான மக்கள்‌ தங்கள்‌ பணத்தை இழந்து தவிக்கின்ற நிகழ்வுகளையும்‌, அரசு ஊழியர்களை ஆளும்‌ கட்சியினர்‌ மிரட்டுவதையும்‌ இந்த விடியா அரசின்‌ காவல்‌ துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறது. மேலும்‌, கடந்த ஒருசில நாட்களில்‌ நடைபெற்ற இரண்டு முக்கிய நிகழ்வுகளை மட்டும்‌ இங்கு குறிப்பிட விரும்புகிறேன்‌.

சென்னை, அண்ணாநகரில்‌ தனது பணியினை முடித்துவிட்டு நள்ளிரவு 12.41 மணிக்கு இருசக்கர வாகனத்தில்‌ தான்‌ வீடு திரும்பும்போது, அசோக்‌ பில்லரில்‌ இருந்து தன்னை ஒருவன்‌ இருசக்கர பல்சர்‌ பைக்கில்‌ பின்தொடர்ந்து
வந்ததாகவும்‌, இது குறித்து தான்‌ உடனே தமிழக அரசின்‌ செயலியை பயன்படுத்தியும்‌ எந்தப்‌ பயனும்‌ இல்லை என்றும்‌, பிறகு ஆதம்பாக்கம்‌ காவல்‌ நிலையத்தில்‌ இது குறித்து புகார்‌ அளித்துள்ளேன்‌ என்றும்‌, சமூக வலைதளங்களில்‌ பதிவிட்டுள்ளார்‌.

கடலூர்‌ அருகே திருச்சோபுரம்‌ என்ற கிராமத்தில்‌ உள்ள தனியார்‌ பெட்ரோலிய ஆலையில்‌ 50 பேர்‌ கொண்ட கொள்ளைக்‌ கும்பல்‌ உள்ளே நுழைந்து திருடிக்‌ கொண்டிருந்த தகவல்‌ அறிந்து, அவர்களைப்‌ பிடிக்கச்‌ சென்ற காவலர்கள்‌ மீது அக்கொள்ளைக்‌ கும்பல்‌ சரமாரியாக பெட்ரோல்‌ குண்டுகளை வீசியும்‌, வீச்சரிவாள்களை எறிந்தும்‌ தப்பிச்‌ சென்றுள்ளனர்‌. காவலர்கள்‌ வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்‌. (நாளிதழ்‌ செய்தி)

எங்களது ஆட்சியில்‌ பெண்கள்‌ மற்றும்‌ முதியவர்களின்‌ நண்பனாக செயல்பட்டுக்‌ கொண்டிருந்த காவலன்‌ செயலி – இந்த விடியா அரசில்‌, காவல்‌ செயலியாக பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டு, தனது செயல்பாட்டையும்‌ நிறுத்தியுள்ளதோ
என்ற சந்தேகம்‌ எழுந்துள்ளது. காவல்‌ துறையின்‌ மீதே பெட்ரோல்‌ குண்டுகளை வீசி தாக்கும்‌ அளவுக்கு கொள்ளைக்‌ கும்பல்‌ இந்த விடியா அரசில்‌ பலம்‌ பெற்றுள்ளதைப்‌ பார்க்கும்‌ போது, இந்த விடியா அரசின்‌ விளம்பர ஆட்சி இன்னும்‌ எத்தனை நாள்‌ நிலைக்கும்‌ என்ற கேள்வியும்‌, தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு என்ன பதில்‌ அளிக்கப்‌ போகிறார்‌ விடியா அரசின்‌ முதலமைச்சர்‌ அவர்கள்‌ ?, என தெரிவித்துள்ளார்

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 887

    0

    0