அதிமுகவின் இந்த நிலைக்கு நீங்கதான் காரணம்… ஒருங்கிணைப்பாளர் எல்லாம் கிடையாது… ‘அன்புள்ள அண்ணா’ எனக் குறிப்பிட்டு ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் கடிதம்!!

Author: Babu Lakshmanan
30 June 2022, 2:56 pm
Quick Share

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் தொடர்பான படிவம் வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 2,400க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.

ஆனால், ஒற்றை தலைமை ஆகாது என்றும், அதிமுகவுக்கு இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்காக, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடமும் மனுக்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான FORM A மற்றும் B படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து இடாததால், அவர்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், அதிமுக வேட்பாளர்களுக்கான படிவங்களில் இன்று மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு இபிஎஸ் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஓபிஎஸ்ஸை ‘அன்புள்ள அண்ணா’ எனக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சி இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதம் செல்லாது என்றும், 2021 டிசம்பர் 1ல் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் ஜூன் 23ல் நடைபெற்ற பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக-வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையது அல்ல, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை இத்தனை மறைமுகமாக எதிர்த்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது நேரடியாக எதிர்க்கத் தொடங்கியிருப்பது அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 733

    0

    0