செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதலமைச்சரின் குடும்பமே போராட்டம்… ஒருநாள் அவர் காணாமல் போவது உறுதி ; எடப்பாடி பழனிசாமி..!!
Author: Babu Lakshmanan3 July 2023, 8:20 am
முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் தார்மீக பொறுப்பேற்று செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் என சேலத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:- கர்நாடக அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும். கர்நாடக நீரவளத்துறை அமைச்சர் சிவக்குமாரின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது.
நல்லதாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும் போது பார்த்து பார்த்து பேச வேண்டிய நிலை உள்ளது. கெட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தைரியமாக செய்ய முடிந்தது என தமிழக முதலமைச்சர் கூறியது, அவரது அனுபவம் இல்லாததை காட்டுகிறது. பொம்மை முதலமைச்சராக அவர் செயல்படுகிறார். இதிலிருந்து அவர் அதிமுக ஆட்சிக்கு எதிராக என்னென்ன செய்திருப்பார் என்று மக்கள் தெரிந்து கொள்ள அவர் பேச்சு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம். அதனடிப்படையில் படிப்படியாக அமல்படுத்த வேண்டும். மது விற்பனை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுவிலக்கால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் கடமை, எனக் கூறினார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறுமியின் கை தவறுதலாக எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்டபோது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சியில் மருத்துவ துறை சிறப்பாக செயல்பட்டது. இன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எதிர்க்கட்சியை குறை சொல்லி தான் பேசுவார். இப்போது ஒரு குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கூட மருத்துவ சிகிச்சை அளித்து விலைமதிப்பில்லாத உயிரை காப்பாற்றியது அதிமுக அரசு.
இப்போது மருத்துவ சிகிச்சைக்கு சென்றால் தகுந்த சிகிச்சை அளிப்பதில்லை. கை இழந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்று நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு அவர்களுக்கு உதவி கரம் ஈட்ட வேண்டும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ்க்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதிமுக என்ற பயிர் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே இலக்கு. தொண்டர்கள் அனைவரும் அதிமுகவில் உள்ளனர் ; திமுகவுக்கு B டீமாக செயல்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் அதனை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும். அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார்.
செந்தில் பாலாஜி விஷயத்தில் அவரைக் காப்பாற்ற ஸ்டாலின் ஒட்டுமொத்த குடும்பமும் போராடுகிறது. முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் தார்மீக பொறுப்பேற்று செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்.
ஒரு கைதியாக இருப்பவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்? அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் இன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. அவர்களும் நிதிமன்றத்தில் வழக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கைதி நம்பர் கொடுக்கப்பட்ட ஒருவரை பதவி நீக்கம் செய்யாதது, கடந்த கால அரசியல் வரலாற்றில் இது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்., எனக் கூறினார்.
மாமன்னன் திரைப்படம் குறித்து கேட்ட போது, மாமன்னன் படம் இன்னும் நான் பார்க்கவில்லை. படம் பார்த்திருந்தால் கருத்து கூறுவேன்.எங்கள் இயக்கத்தை சேர்ந்த யாராவது நடித்திருந்தால் படத்தை பார்த்து கருத்து சொல்லி இருப்பேன், என்று தெரிவித்தார்.