நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… தமிழகம் பற்றியே எரிந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலினின் காதுகளுக்கு விழாது : இபிஎஸ் விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan16 March 2023, 8:35 pm
திருச்சியில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை தாக்கி, தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் நெஞ்சை பதற வைத்ததாகவும், தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்து இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53). திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் இவர், கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார்.
இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். மயங்கி விழுந்த அவரை தரதரவென்று இழுத்து ஓரமாக போட்டுவிட்டு, அவரது இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது :- திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது, யார்க்கும்-எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0