இது வெத்துவேட்டு அறிக்கை… தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாய்ப்பந்தல் : தமிழக பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
18 March 2022, 2:25 pm

சென்னை : தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முற்பட்டார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பேசுவதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுத்ததைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக மட்டுமே உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது ரூ.4.85 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், ரூ.1.08 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். இவ்வளவு கடன் பெற்றும் முக்கிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. அதேவேளையில், நடப்பாண்டில் மேலும் கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் இருந்தாலும், மூலதன செலவுகளுக்காக மட்டுமே கடன் பெற்றோம். கொரோனா தொற்று பரவல் இருந்ததால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நேர்ந்தது. இதனால், வருமானம் குறைவாக இருந்தது. ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால், எவ்விதத்திலும் வருமானம் கிடைக்கவில்லை.

ஆனால், தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போது, கொரோன பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. தொழிற்சாலைகள் இயங்கின. பெட்ரோல், டீசல் அதிகளவு விற்பனை ஆகியது. பத்திரப்பதிவு அதிகளவு நடந்தது. போக்குவரத்து துறையில் வருமானம் கிடைத்தது. வருமானம் அதிகரித்த போது கடன் குறைய வேண்டும். ஆனால், தற்போது வருவாய் அதிகரித்தும், கடன் குறையவில்லை. தி.மு.க., அரசு முறையாக செயல்படவில்லை.

மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பல சாக்கு போக்குகளை சொல்கின்றனர். கல்விக்கடன் தள்ளுபடி பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும், தமிழகத்தில் டீசல் விலை குறைக்கப்படவில்லை. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பட்டியலில், கட்டுமான பொருட்கள் சேர்க்கப்படும் என்ற திமுக.,வின் வாக்குறுதி நிறைவேற்றவில்லை.

தேர்தல் நேரத்தில் திமுக., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அரசின் பட்ஜெட் வார்த்தை ஜாலம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாய்ப்பந்தல். தி.மு.க.,வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1395

    0

    0