தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியல… இதுல தேசிய அரசியல் வேற ; முதலமைச்சர் ஸ்டாலினின் பீகார் பயணம் குறித்து இபிஎஸ் விமர்சனம்
Author: Babu Lakshmanan24 June 2023, 7:43 pm
தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகாருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்கப் போகிறாரா?, என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் அவர்பேசியதாவது :- அம்மா மினி கிளினினக் உள்ளிட்ட நல்ல திட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது. ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக நிறைவேற்றியுள்ளது.
7.5% ஒதுக்கீடு கொண்டு வந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழி செய்யப்பட்டது. வீட்டு வரி, மின்கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது ஏன்..? 2 கோடியில் சிலை வைத்து விட்டு, 80 கோடியை மாணவர்களுக்கு செலவிடலாமே..? தலைவாசல் கால்நடை பூங்கா திட்டத்தை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.
மக்களுக்காக உழைக்கின்ற, சேவை செய்கிற கட்சி அதிமுக தான். தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகாருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்கப் போகிறாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.