ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது… அதனால்தான் ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றியுள்ளார் : எடப்பாடி பழனிசாமி நக்கல்..!!
Author: Babu Lakshmanan3 February 2022, 4:35 pm
சென்னை : சமூக நீதிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத ஸ்டாலின், 37 கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியதன் உள்நோக்கம் என்ன…? என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஸ்டாலின் தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா ? தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் நுழைந்திருக்கிறார்.
அகில இந்திய அளவிலும், குறிப்பாக நம் தாய்த் திருநாடான தமிழகத்திலும் சமூக நீதிக்கு இப்போது என்ன பாதிப்பு வந்துள்ளது என்று யாருக்கும் புரியவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, சமூக நீதிக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டது என்றால் அதற்கு மூலக் காரணம் திமுக-வாகத் தான் இருக்கும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
1996 முதல் 2013 வரை, மத்திய அரசில் சுமார் 17 ஆண்டுகள் தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோருடன் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து, தங்களது சொந்தங்களுக்கெல்லாம் முக்கியமான மந்திரி பதவிகளை வாங்கி, ஊழலில் திளைத்த திமுக மற்றும் அப்போது அக்கட்சியின் செயல் தலைவராக இருந்தஸ்டாலின் அவர்கள் சமூக நீதிக்காக என்ன செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்.
• திமுக – காவேரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, நீட் நுழைவுத் தேர்வு பிரச்சனை, ஜல்லிக்கட்டு இட ஒதுக்கீடுப் பிரச்சனை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலன் என்று, எதிலும் எதையும் செய்யாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது.
• தமிழகத்திற்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசுக்கு உறுதுணையாக இருந்தது. போன்ற பல்வேறு துரோகங்களை இழைத்த திமுக இன்று, சமூக நீதி என்ற போர்வையில் கபட நாடகம் ஆடுகிறது.
• பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
• 50 சதவீத இட ஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்தி, அதற்கு சட்டப் பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
• 1991-96 காலக்கட்டத்தில், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெறாத போதும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அன்றைய பாரதப் பிரதமர் நரசிம்மராவ் அவர்களிடம் வாதாடி, போராடி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியைக் காத்தவர் எங்கள் அம்மா
அவர்கள். இதற்காகவே, தற்போது ஏதோ சில காரணங்களுக்காக திமுக அணியில் உள்ள தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அளித்தார்.
• ஆனால், சமுக நீதிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத இன்றைய திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து, 37 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதன் உள்நோக்கம் என்ன ?
இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2024ல் தான் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே பல மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு, தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே, ஸ்டாலின் அவர்களும் அதே எண்ணத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற போர்வையில் கடிதம் எழுதி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் கூட்டமைப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ, விளம்பாங்களிலோ, கடிதத்திலோ எந்தெந்த விதத்தில் சமூக நீதி பறிக்கப்பட்டது; எந்தெந்த விதத்தில் தமிழக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை என்றெல்லாம் விளக்காமல், தற்போதைய மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் கிடைத்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தான்தான் காரணம் என்று மார் தட்டுகிறார்.
இதற்காக உயர்நீதிமன்றத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. நமக்கு இந்தப் பிரச்சனையில் நல்ல பெயர் வந்துவிடுமே என்ற எண்ணத்தில் பின்யோசனையுடன் திமுக-வும், மற்றவர்களும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான், இதே பிரச்சனைக்காக உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்துடன் ஒட்டிக்கொண்டு வந்தது திமுக. மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபின், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு சட்டத்தை இயற்றியது. இதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்களுக்கு நன்மை வரக்கூடிய ஒரு சட்டத்தை இயற்றியவர்களுக்கு நன்றி சொல்லக்கூட மனம் வராத திரு. ஸ்டாலின் அவர்கள் ஏதோ தன்னால்தான் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது.
1980-ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடுகள் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை அளித்த போது, அன்றைய காங்கிரஸ் அரசோடு கொஞ்சிக் குலாவி இருந்தது திமுக என்பதை யாரும் மறக்கவில்லை. மேலும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற எந்த ஒரு துரும்பையும் திமுக கிள்ளிப்போடவில்லை என்பதையும் கூட மக்கள் மறக்கவில்லை.
1991-ல் மறைந்த திரு. நரசிம்மராவ் அவர்கள் பாரதப் பிரதமராக இருந்தபோது தான், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் மாண்புமிகு அம்மா அவர்களும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தினாார்கள்.
உச்சநீதிமன்றமே பல்வேறு மாநிலங்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளித்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பின்னால் சுமார் 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது, இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணமான திமுக-வும், அதன் தலைமையும் சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்துவதும், அதில் சேர இந்தியாவில் உள்ள 37 கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பதும் உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.
ஏற்கெனவே, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்த ஒரு மாநில முதல்வராவது பதில் கடிதம் எழுதி இருக்கிறார்களா ? அப்படி எழுதி இருந்தால் அந்தக் கடிதத்தை திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிடத் தயாரா ?
இன்றைக்குக்கூட, பல மாநிலக் கட்சித் தலைவர்கள் இந்தப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தின் பொருள் புரியவில்லை என்று கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. எனெனில், வடமாநிலங்கள் மற்றும் குறிப்பாக, தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகியவற்றில் நீட் நுழைவுத் தேர்வாக இருந்தாலும்; இடஒதுக்கீடாக இருந்தாலும்; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தாலும், எந்த விதத்திலும் சமூக நீதி மீறப்படவில்லை என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, திரு. ஸ்டாலின் அவர்கள் 37 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தன்னுடைய 9 மாத கால ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள், கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன், அராஜகம், அத்து மீறல், காவல் துறையினர் உட்பட அனைத்துத் துறையினருக்கும் பாதுகாப்பின்மை, கொலை கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சட்டவிரோத, சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மக்களிடத்தில் கடந்த 9 மாத கால திமுக அரசின் தோல்வியை மறைக்க, சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப் பூ நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், முடிந்தால் எதையாவது செய்யும்படி திரு. ஸ்டாலின் அவர்களை வற்புறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.