மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி… காவல்துறைக்கே இந்த கதி.. சாதாரண மக்களின் நிலைமை அவ்வளவுதான்..? தமிழக அரசை எச்சரிக்கும் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
8 June 2022, 4:44 pm

கந்து வட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் உளுந்தூர்பேட்டை 10வது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1ம் தேதி கடலூர் வந்த நிலையில், நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாகவும், ஆனால் அந்த பெண் கடன் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதி வாக்குமூலம் பெற்ற நிலையில், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வக்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கடலூர் – புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் திரு.செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கள்ள லாட்டரி,ஆன்லைன் ரம்மி,கந்துவட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென மாண்புமிகு அம்மா அவர்களும் அம்மா அரசும் தடை செய்ததோ அவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன.

கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!