நம்பர் ஒன் முதல்வர் எப்போது உணர்வார்..? மகளுக்கு தரமற்ற சிகிச்சை.. காவலரே தெருவில் இறங்கி போராடும் நிலை ; இபிஎஸ் வேதனை!!
Author: Babu Lakshmanan14 April 2023, 1:41 pm
சென்னை : சென்னையில் தரமற்ற சிகிச்சையினால் காவலர் மகளின் கால் பாதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது 10 வயது மகள் பிரதிக்ஷா, 3 வயது முதல் சிறுநீரக பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக சிறுமி உட்கொண்டு வந்த நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்ஷாவின் வலது கால் பாதத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதிக்ஷாவுக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதம் கருகியதுடன் உடலில் உள்ள இரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கள் அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டது என கோதண்டபாணி குற்றம் சாட்டியுள்ளார். இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்தது எனவும், மருத்துவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவர் பேசும் போது, மருத்துவர்கள் அலட்சியத்தால் என் மகள் கால் பறிபோனதாகவும், என்னையும் என் குழந்தையும் கருணை கொலை செய்யுங்கள் என மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.. காக்கிச் சட்டையே வேணாம் என கதறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவலருக்கும், அவரது மகளுக்கும் ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “சிறு பிள்ளையின் மருத்துவ சிகிச்சை என்பது கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது, அதிலும் நமக்காக இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு காவலரின் குழந்தைக்கு இன்னும் கவனத்துடன் இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகத் திறனற்ற இந்த அரசு இதிலும் மெத்தனம் காட்டி இருப்பது வருந்தத்தக்கது.
பெண் பிள்ளைகளுக்கு சுகாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தமிழ்நாடு திணறி வருவதையும், ஒரு காவலரே தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை இருப்பதையும், நம்பர் ஒன் முதல்வர் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் இந்த விடியா முதல்வர் எப்போது உணர்வார்?,” என தெரிவித்துள்ளார்.