விளம்பர ஆட்சி நடத்தும் விடியா அரசு… மக்களைத் தேடி மருத்துவம் ஒரு டிராமா..? விபரங்களை வெளியிட முடியுமா..? இபிஎஸ் சவால்!!
Author: Babu Lakshmanan19 January 2023, 11:36 am
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களைத் தந்த
விடியா தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நின்றால் விளம்பரம், நடந்தால் விளம்பரம், சைக்கிள் ஒட்டினால் விளம்பரம் என்று விளம்பர மோகத்துடன் தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த விடியா தி.மு.க. அரசு, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் அரசு மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கு மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் தரப்படும் என்று இத்திட்டத்தை துவக்கும்போது தெரிவித்திருந்தது.
மேலும், அரசு மருத்துவமனையில் தங்கள் உடல்நலக் குறைவுக்கு மருந்து உட்கொள்ள விருப்பப்படுகிற ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்றும், இதற்கு 6 மாத காலம் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்றும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தைத் துவக்கி வைக்கும்போது இந்த விடியா அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன என்றும், பெரும்பாலான நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறுகிறார்கள். நோயாளிகள் குறிப்பாக இத்திட்டத்தைப் பற்றி,
- முதல் தடவை மட்டும் எங்களை பரிசோதித்து, மாத்திரை கொடுத்துட்டுப் போனாங்க
- முதல் தடவை வந்த போது “மாசா மாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து, BP, sugar செக் பண்ணிட்டுப் போவோம்னு சொன்னாங்க. ஆனால், அதன் பிறகு இதுவரை ஒருநாள்கூட வந்து பார்க்கல. அருகில் உள்ள தெரிந்தவர்களிடம் காசு கொடுத்து, மாத்திரை வாங்கி சாப்பிடுகிறேன்.
- போனவங்க வரவே இல்ல!
- போட்டோ எடுக்க மட்டும் வந்தாங்க!”
- யாராவது வந்து கேட்டா அடிக்கடி வாரறாங்கன்னு சொல்லச் சொன்னாங்க என்று கூறியதையும், அத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளையும் கடந்த 7.8.2022 அன்று நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் விவரமாக எடுத்துரைத்திருந்தேன்.
இந்நிலையில், 29.12.2022 அன்று விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்கள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது.
அப்படி ஒரு கோடி பேருக்குமேல் மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருந்தால்,
மருந்துக்காக மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும், என்னென்ன நோய்க்கு எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன; ஒரு கோடி பயனாளிகளின் விவரங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் விசாரித்தபோது, மாநில மருத்துவத் துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும்மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் டூப்ளிகேஷன் – அதாவது ஒரே
புள்ளி விவரம், இரண்டு/மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்குமேல் பயன் பெற்றுள்ளனர் என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும்
புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில், ஒரு வாகனத்தை மட்டும் கூடுதலாக்கி, இந்த விடியா அரசு “மக்களைத் தேடி மருத்துவம்” என்று மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி இருக்கிறது.
ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிவடைந்த பிறகும், இப்போதும் முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே விளம்பர ஆட்சி நடத்தி வரும் இந்த விடியா அரசு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் இந்த விடியா விளம்பர அரசின் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.