இது திராவிட மாடல் இல்ல… திராவக மாடல் ; ஆட்சிக்கு வரும் போது என்ன சொன்னீங்க.. நியாபகம் இருக்கா..? இபிஎஸ் கேள்வி

Author: Babu Lakshmanan
24 April 2023, 2:32 pm

தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் திருமண மண்டபங்களிலும் மதுபானங்களை பரிமாற அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம். மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்களிடம் இதற்கான அனுமதியை பெற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பார்கள், நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள், இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த கொள்ளலாம். மேலும், உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழ் F.L.2 என்ற லைசென்ஸ்க்கான கட்டணம் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டாஸ்மாக்கை மூடுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது, மதுபான விநியோகத்தை விரிவடையச் செய்ய முயற்சிப்பதா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக அரசின் இந்த செயலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் திமுக அரசு. இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.

மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு. பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி, என தெரிவித்துள்ளார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!