கைவிடப்பட்ட நிலையில் CM ஸ்டாலின்… திமுக ஆட்சியால் பயத்தில் மக்கள்… இனியும் கண்துடைப்பு நாடகம் வேண்டாம் : எச்சரிக்கும் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 6:10 pm

சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த இயலாத கையறு நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால கழக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு முறையான ஆட்சி நடைபெற்றது; மக்கள் சுதந்திரமாக நடமாடினர். 2006 முதல் 2011 வரை திமுக தமிழகத்தை ஆட்சி செய்த காலத்திலேயே, மதுரைக்கு சுதந்திரமாக போகக்கூட இயலாத நிலையில் இருந்த தற்போதைய முதலமைச்சர், 2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான் மதுரை மண்ணை தைரியமாக மிதித்தார் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தை ஆட்சி செய்யும்போதெல்லாம் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் காவல் துறையில் அரசியல் குறுக்கீடு இல்லை, ஜாதி, மத மோதல்கள் இல்லை; அதிகாரிகள் மிரட்டப்படுவது இல்லை; எனவே, சாதாரண முட்டுச் சந்து முதல், வெளிநாட்டு முதலீட்டுடன் வியாபாரம் செய்யும் அனைத்துத் தொழில் முனைவோர்களும் எந்தவித அச்சமுமின்றி தங்கள் தொழிலை செய்து வந்தனர். அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான ஆட்சியிலும், 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பெரிய மாநிலங்களில் முதலிடத்தை தமிழகம் பெற்றது.

பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த முதல் பெருநகரம் என்ற பெருமையை சென்னையும், மற்ற இடங்களை தமிழகத்தின் இதர நகரங்களும் பெற்றன. விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழகத்தில் தற்போது நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? என்று தெரியாத அளவுக்கு அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளால் அனைவரும் உறைந்து போயுள்ளனர். ஆளும் தி.மு.க-வினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 15.3.2023 அன்று, விடியா அரசின் மூத்த அமைச்சருக்கும், ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தத்தில், ஆளும் திமுக நிர்வாகிகள் திருச்சி கண்டோன்ட்மெண்ட் காவல் நிலையத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட அமைச்சரின் அடியாட்கள், காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களைத் தடுத்த பெண் காவலரையும் தாக்கி உள்ளனர். அந்தத் தாக்குதலில் பெண் காவலரின் கை முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வருகின்றன. உட்கட்சி மோதலில் காவல் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறை உடனடியாகக் கைது செய்யாமல் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, ஆற அமர இருபிரிவினரிடமும் புகார் மனுக்களைப் பெற்று, மேலிடத்தின் அனுமதியைப் பெற்று மெதுவாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுகிறது.

தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதலமைச்சரை இப்போதுதான் தமிழகம் முதன்முதலாகப் பார்க்கிறது. மேலும், ஒரு அமைச்சருக்கு அவரது கட்சிக்காரர்களே கருப்புக் கொடி காட்டுவதும், ஆளும் திமுக-வின் உள்ளாட்சி மேயர்கள் மற்றும் தலைவர்கள் மீதே உள்ளாட்சி மன்றங்களில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்களே புகார் கூறுவதும், தமிழகம் முழுவதும் நடைபெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த விடியா அரசின் முதலமைச்சர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல், ஆளும் திமுக நிர்வாகிகளின் அராஜகம் போன்றவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்த நிர்வாகத் திறனற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 334

    0

    0