ஒரு விக்கெட் அவுட்… அமைச்சரவையில் இருந்து PTR-ஐ தூக்காததற்கு காரணமே இதுதான் ; எடப்பாடி பழனிசாமி சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 5:06 pm

ஆவினில் முறைகேடு நடந்திருப்பதால் தான் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து திமுக, தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகி, சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஓபிஎஸ், டிடிவி.தினகரன் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சேரும்போது பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை மாயமான், மண்குதிரையும் ஒன்று சேர்ந்து உள்ளது.பூஜ்ஜியம் பிளஸ் பூஜ்ஜியம் = 0 என்று தான் இருக்கும்.

துரோகி என்று ஒருவரை ஒருவர் என்னை குறிப்பிட்டார்கள். இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாக கூறியுள்ளனர். துரோகி என்றாலே எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.தினகரன் கூடாரம் காலியாகிவிட்டது. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலைதான் தற்பொழுது உள்ளது.

ஓபிஎஸ்-ம், தினகரனும் இணைந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளித்தார். இவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்குமே விசுவாசமாக இருந்ததில்லை. ஜெயலலிதா இருந்தபோது கட்சியிலிருந்து விலகி சென்றார். பின்னர் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிக்கு சென்றார். அங்கும் விசுவாசமாக இல்லாமல் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளிப்பது விந்தையாக உள்ளது.பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கு சென்றாலும், அந்த கட்சி முடிந்துவிடும். அப்படித்தான் இருந்த நிலை,அவர் நிழல் கூட உடன் வரவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.

அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததாகவும், இவரால் தான் அதிமுக இயங்கி வந்ததாகவும் மாயத் தோற்றத்தை உருவாக்கிய பேட்டி அளிக்கிறார். ஒரு கிளைச் செயலாளர் உள்ள தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை. ஓபிஎஸ் திமுகவிற்கு பிடிமாக செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அது நிரூபணம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே டீம் விளையாடியபோது ஓபிஎஸ் பார்க்க சென்றிருந்தார். அப்போது ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளார். திமுகவை நிர்வகிப்பது சபரீசன் தான், என்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடரப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது :- என் மீது ஏற்கனவே ஆர்எஸ்.பாரதி பொய்யான வழக்கு தொடர்ந்தார். டென்டரில் முறையீடு என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது வழக்கை திரும்ப பெற்றனர். இவர்கள் செய்த ஊழல்களை மறைப்பதற்காக எங்கள் மீது வழக்கு போட்டு வருகின்றனர். எந்தவித உண்மையும் இல்லை. அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று நிரூபணம் செய்துள்ளோம், என்றும் பேசினார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, ஊழலின் வெளிப்பாடு தான் அமைச்சரவை மாற்றம். அப்படி இல்லாவிட்டால் ஏன் அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. மக்களின் எண்ணமும் இதுதான். ஒரே ஒரு ஆடியோவால் அரசாங்கம் ஆடிப்போய்விட்டது. ஒரு விக்கெட் போய்விட்டது, அமைச்சரவை ஆடிப்போய் உள்ளது. திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு காலம் ஆட்சியில் ஊழலைத் தவிர வேற எதுவும் செய்யவில்லை. எல்லா துறைகளும் ஊழல் என்று விமர்சனம் செய்தார். இதனால் நிதி அமைச்சர், தகவல் தொழில் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முப்பதாயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். இன்னும் நிறைய ஆடியோக்கள் வரும் என்று சொல்லி உள்ளனர். அவ்வாறு வந்தால் நிறைய செய்திகள் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் திமுக செய்த சாதனை 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தது தான்.

மேலும், அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டிருந்தார், இன்னும் நிறைய செய்தி வந்துவிடும், பணம் எங்கெங்கு உள்ளது என்று சொல்லிவிடுவார் என்று நீக்காமல் உள்ளதாக நினைப்பதாக கூறினார். ஏற்கனவே உள்துறை அமைச்சர் இடம் தமிழகத்தில் ஊழல் பட்டியலை தெளிவாக தெரிவித்துள்ளோம். மத்திய அரசுக்கு முழுகவனம் செலுத்தியுள்ளது. ஆடியோ மூலமாக ஒரு நிதியமைச்சர் கூறும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. சட்ட ரீதியாக என்ன செய்யமுடியுமோ, அதை அதிமுக செய்யும் என்றும் கூறினார்.

ஆவினில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. அதிகார துஷ்பியோகம் நடைபெற்றுள்ளது. இதனால் பால் உற்பத்தி மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறியிருந்தோம். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதையெல்லாம் உண்மை என்று நிரூபிக்கும் விதமாக திமுக அரசாங்கம் அமைச்சர் நாசரை நீக்கி உள்ளது, என்றும் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தொடர்பான கேள்விக்கு, என் மீது எந்தசொத்தும் கிடையாது, எந்த சொத்தும் என் மீது வாங்கவில்லை. இதுவரை வாங்கியதில்லை. அரசியல் ரீதியாக என்மீது எதுவும் செய்ய முடியவில்லை. புகார்தாரர் திமுகவை சேர்ந்தவர் திமுக தூண்டுதல் பேரில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சட்ட ரீதியாக சந்திப்பேன். இது முழுக்க முழுக்க விதிமீறல் ஆகவே பார்க்கிறேன். வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடத்தில் தொடர வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்பட்டுள்ளது. வேண்டும் என்று திட்டமிட்டு பொய்யாக பரப்புகின்ற தகவலாக உள்ளது.

அதிமுகவை நேசிப்பவர்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களை மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்வோம். துரோகிகளையும், அதிமுகவுக்கு துரோகம் நினைப்பவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. தொண்டர்கள் தலைமை ஏற்று நடக்கும் கட்சி அதிமுக, தொண்டர்கள் என்ன எண்ணுகிறாரோ, அதை நிறைவேற்றும், என்றும் பேசினார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!