நீதிமன்ற தீர்ப்புகளை கடந்து திமுக எதிர்ப்பில் உறுதி காட்டும் EPS… நடு நடுங்கும் OPS.. சாதித்தது எப்படி..?
Author: Babu Lakshmanan17 August 2022, 6:48 pm
உறுதியான இபிஎஸ்
அதிமுகவை 1972ல் நிறுவிய புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், அவருடைய மறைவுக்குப் பின்பு எழுச்சியோடு அதிமுகவை வழிநடத்திய புரட்சித்தலைவி ஜெயலலிதாவும்
தங்களது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை திமுகவுக்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள். அக்கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தவர்கள் என்பது அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மட்டுமின்றி அரசியலில் ஆர்வம் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.
அதே போராட்ட குணம் சிறிதும் குறையாத தலைவராக இன்று திகழ்பவர் என எடப்பாடி பழனிசாமியை சொல்லலாம்.
2017 பிப்ரவரி மாதம்16-ம் தேதி தமிழக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமாடி அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற வைத்தது வரை அதிமுகவின் முதுகெலும்பாக இருந்தவர் அவர் மட்டுமே!
அதுவும் 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு, இந்த நிலைப்பாட்டில் இன்றுவரை உறுதியாக உள்ள அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான் என்று அடித்துக் கூறவும் முடியும்.
மறந்துபோன ஓபிஎஸ்
ஏனென்றால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.
அதேநேரம் தன்னை அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருப்பதாக கூறிக்கொள்ளும் ஓ பன்னீர்செல்வமோ தனது சொந்த தொகுதியை தவிர வேறு எந்த தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வதில் ஆர்வம் காட்டவே இல்லை. தென் மாவட்டங்களை அவர் மறந்தே போனார்.
இதற்கு முக்கிய காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் தான் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது, என்பது ஓபிஎஸ்-க்கு தெரியும். அதனால் மாநிலத்தில் திமுக ஆட்சி அமைந்தால் கூட பரவாயில்லை என்று நினைத்து ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் சந்தேகமும் ஆகும். இதனால்தான் திமுக தனி மெஜாரிட்டியும் பெற்றது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இதற்கு இன்றுவரை ஓ பன்னீர்செல்வம் எந்த பதிலும் சொல்லவில்லை. கூறவும் முடியவில்லை.
வாக்குவித்தியாசம்
அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் தனக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓபிஎஸ், தான் போட்டியிட்ட போடி நாயக்கனூர் தொகுதியிலேயே கூட தட்டுத்தடுமாறி 11 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆனால் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமியோ 94 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்தே அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அமோக ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெற்றுவிட்டார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பின்வாங்கிய ஓபிஎஸ்
அதேநேரம் தேர்தல் நடந்து முடிந்த பின்பும் கூட திமுக எதிர்ப்பு நிலை என்னும் பக்கம் ஓபிஎஸ் மறந்தும் எட்டிப் பார்க்கவில்லை. மாறாக தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்ளும் நோக்குடன் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதரவை தேடத் தொடங்கினார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை. இதனால்தான் கட்சித் தொண்டர்களை ஒருபோதும் அவரை நம்பவில்லை.
ஏனென்றால் 2017 முதல் 2019 மேமாதம் வரை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக சசிகலாவும், தினகரனும் என்னென்ன தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் செய்தார்கள் என்பது அதிமுக தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலருடைய வீடுகளில், திமுக அரசு லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது.
அப்போது எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வன்மையாக கண்டித்ததோடு அதிமுக தலைவர்களுக்காக உரக்கக் குரல் கொடுக்கவும் செய்தார். ஆனால் ஸ்டாலின் அரசு எங்கே தன் மீது கை வைத்து விடுமோ என்று பயந்து, ஓ பன்னீர்செல்வம் எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்பதும் அதிமுகவினர் அறிந்த ஒன்று.
திமுகவுடன் நெருக்கம்
அதுமட்டுமின்றி சட்டப் பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியை ஓபி எஸ் வெகுவாக புகழ்ந்து பேசினார். கருணாநிதி எழுதிய பராசக்தி படத்தின் வசன புத்தகத்தை சிறு வயதில் உறங்கும்போதும் கூட வைத்திருப்பேன் என்று பாராட்டு பத்திரமும் வாசித்தார்.
அதேநேரம் அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்பியோ தன்னை காப்பாற்றிக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார் என்கிறார்கள். அத்துடன் திமுக ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது என்று புகழ்ந்து பேசவும் செய்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இப்படி ஒரு அதிமுக எம்பியோ, எம்எல்ஏவோ நடந்து கொண்டிருந்தால் அவர்களது கதி என்னவாகியிருக்கும் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் தெரியும்.
ஆனால் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்தது என்னவோ தன் மகன் என்பதால் ஓபிஎஸ் அதை கண்டிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை. இதை எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஓபிஎஸ் செய்த மாபெரும் துரோகச் செயலாகவே அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர்.
அதுவும் கடந்த ஜூலை 11ம் தேதி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்
அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை காலால் எட்டி உதைத்து, உடைத்துக் கொண்டு ஆவேசமாக உள்ளே சென்ற காட்சியையும், கட்சி அலுவலக பத்திரங்களை அள்ளிப் போட்டுக்கொண்டு ஒரு வேனில் ஏற்றி சென்றதையும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்த அதிமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அது ஓபிஎஸ் பதவி வெறி கொண்டவர் என்பதைப் பறைசாற்றுவது போலவும் அமைந்திருந்தது.
இப்படிப்பட்ட ஒருவரையா? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்பி முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார் என்று அதிமுக தொண்டர்கள் அனைவரும் மனம் நொறுங்கிப் போனதுதான் மிச்சம்!
பாஜக கணக்கு
இதுபோன்ற ஒருவரிடம் கட்சி செல்வதை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“பெற்றோரின் மறைவுக்கு பின்பு குடும்பத்தில் கூடவே இருக்கும் ஒருவன், நம்பிக்கை துரோகம் செய்கிறான், அதற்காக எதிராளிகளின் உதவியையும் நாடுகிறான், உண்மையான விசுவாசி ஒருவன் குடும்பத்தை முன்னெடுத்து செல்வதையும் தடுக்கிறான். அந்த மா பாதகனை ஓரம்கட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தாலும் கூட அதை தனக்கு தெரிந்த தகிடுதத்த வேலைகள் எல்லாம் செய்து தப்பித்துக் கொள்கிறான், ஒரேயடியாக ஆட்டமும் போடுகிறான் என்று கிராமத்தில் ஒரு கதை உண்டு.
அதுபோன்ற சோதனை நிலையைத்தான் இன்று அதிமுக சந்தித்து வருகிறது. ஆனால் ஓபிஎஸ்சின் துரோக செயல்களை நன்கு அடையாளம் கண்டு கொண்டுள்ள அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் அவரை ஆதரிக்க மாட்டார்கள், அவருடைய திமுக ஆதரவு நிலைப்பாட்டிற்காக மன்னிக்கவும் மாட்டார்கள். அவர்களுக்கு திமுகவை எதிர்ப்பதற்கான தெம்பு, திராணி, துடிதுடிப்பு எல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும்.
அதனால் ஓபிஎஸ் என்னதான் அதிகாரத்தை வைத்து குட்டிக்கரணம் போட்டாலும், ஆட்டம் காட்டினாலும் அதிமுக தொண்டர்களின் ஆதரவை எப்போதும் பெற முடியாது என்பதே உண்மை. அவர் ஒரு காகிதப் பூதான்.
சசிகலா, தினகரன் ஆதரவு வேண்டுமானால் அவருக்கு முழுமையாக கிடைக்கலாம். எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்குவதே அதன் எதிர்காலத்துக்கு உகந்தது. அப்போதுதான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியும்.
அதிமுக பலவீனம் அடைந்தால் நமது கட்சி தமிழகத்தில் அமோகமாக வளரும் என்று பாஜக கருதுகிறது. திமுகவும் தனக்கு எதிராக வலிமையான ஒருவர் இருக்கக்கூடாது என்று நினைக்கிறது. அதற்கு ஓபிஎஸ்தான் பொருத்தமான நபராக இருப்பார் என்று இரு கட்சிகளுமே கணக்கு போடுகின்றன.
மேலும் இப்போது ஓபிஎஸ்ஐ மறைமுகமாக இயக்கி வருவது திமுக, டெல்லி பாஜக, தமிழகத்தின் சில ஆடிட்டர்களும்தான். அவர்களுக்கு ஓபிஎஸ் பயந்து நடுங்குகிறார், ஒடுங்குகிறார் என்பதை அதிமுகவினர் அனைவரும் அறிவார்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருந்தால் அவரிடம் பேரம் பேசி தொகுதிகளை வாங்குவது கடினம் என்பது 2019, 2021 தேர்தல்களில் பாஜக கற்றுக்கொண்ட பாடம். ஆனால் ஓபிஎஸ் என்றால் அப்படியே அள்ளிவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு. “என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.