சபரீசனை சந்தித்தவருக்கு கூட்டணியில் இடமா…? பாஜகவின் முடிவால் புதிய குழப்பம்!
Author: Babu Lakshmanan13 May 2023, 8:00 pm
இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியபோது
2024 தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூட்டணி அமைவது உறுதி என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது பாஜகவின் தேசிய தலைமை ஒரே நேரத்தில் அதிமுகவுடனும், அதற்கு நேர் எதிர் திசையில் உள்ள ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடனும் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவது வெளிப்படையாக தெரிகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூலம் இது வெளிப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வத்தையும், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனையும் உங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் ஒரு கேள்வியை எழுப்பினர்.
அதற்கு அவர் கூறிய பதில்தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அந்த கேள்விக்கு அண்ணாமலை அப்படி என்னதான் பதில் சொன்னார்?…
“தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை எந்த குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறோம். எங்களது கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.
அதற்கான விருப்பத்தை அவர்கள் தெரிவித்ததால் அது குறித்து தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். குறிப்பாக பிரதமர் மோடியும் ஜே பி நட்டாவும் அதை தீர்மானிப்பார்கள்.
ஆனால் யாருக்கும் அந்த விருப்பத்தை தெரிவிக்க உரிமை இல்லை என்று கூற எனக்குத் தகுதி கிடையாது. ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அதேநேரம் எங்கள் கூட்டணியில் இணையும் ஆசையை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். நாங்கள் எந்த பக்கமும் செல்லாமல் நடுநிலையாகத்தான் இருக்கிறோம்.
இப்போதும் அண்ணன் ஓபிஎஸ் மீது எங்கள் கட்சியில் தனிப்பட்ட முறையில் தலைவர்கள் அனைவரிடத்திலும் பெரிய கௌரவம் இருக்கிறது. அது பிரதமராக இருக்கட்டும், நம் உள்துறை அமைச்சராக இருக்கட்டும் அல்லது தேசிய தலைவர் ஜே பி நட்டாவாக இருக்கட்டும்.அத்தனை பேரிடமும் அந்த கௌரவம் உள்ளது. அவர்களை கூட்டணியில் எந்த வடிவத்தில் எத்தகைய பார்முலா அடிப்படையில் சேர்ப்பது என்பது பற்றி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலையின் இந்த கருத்து, மாநில பாஜக தலைவர் என்கிற முறையில் அவரால் தெரிவிக்கப்பட்டதா?அல்லது டெல்லி தேசிய தலைமையின் விருப்பத்தை அவர் தெரிவித்து இருக்கிறாரா?… என்ற கேள்விகள் எழுந்தாலும் கூட ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்தியலிங்கம் “எங்கள் பக்கம்தான் டெல்லி பாஜக இருக்கிறது” என்று சமீபத்தில் கூறிய நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுக பாஜக கூட்டணிக்குள் ஓபிஎஸ், டிடிவி தினகரன் சசிகலா மூவரும் எந்த வடிவிலும் வர முடியாது. ஏதாவது குறுக்கு வழியில் உள்ளே நுழைந்தாலும் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று அதிரடியாக கூறியிருந்தார்.
அப்படியென்றால் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது இதுபற்றி அதிமுக தலைவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறியிருப்பார்கள் என்பதும் நிச்சயம்.
என்றபோதிலும் தென் மாவட்டங்களில் உள்ள ஒரு சில நாடாளுமன்ற தொகுதிகளில் முக்குலத்தோரின் வாக்குகளை இழந்து விடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவரையும் ஏதாவது ஒரு விதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர தீவிர முயற்சிகளை டெல்லி பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு 34 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுகவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் விதமாக வாக்கு வங்கி இருக்கிறது. அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் கொங்கு, மத்திய, வடக்கு மண்டலங்களில் கணிசமான இடங்களில் வெற்றி பெற முடியும் என்றும் டெல்லி பாஜக கணக்கு போடுகிறது.
“இப்படி எதிரும் புதிருமாக உள்ளவர்களை ஒரே நேரத்தில் டெல்லி பாஜக ஏன் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறது என்பதுதான் தெரியவில்லை. இந்த விருப்பம் நிறைவேறினால் தமிழகத்தில் பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்” என்று அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன்,சசிகலா மூவருக்கும் முக்குலத்தோரிடம் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது என்று நம்பும் பாஜக தமிழகத்தில் நடந்த முந்தைய சில தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருந்தன என்பதையும் கவனிப்பது நல்லது.
குறிப்பாக 1996 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டிலுமே காங்கிரஸ்சுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. எம்பி தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலிலோ நான்கு இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.
இந்த தேர்தலின்போது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவருமே அதிமுகவில்தான் இருந்தனர். ஜெயலலிதாவுக்கு சசிகலா வலது கரம் போலவே திகழ்ந்தார். அப்படி இருந்தும் கூட முக்குலத்தோர் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் அதிமுகவால் வெற்றியே பெற முடியவில்லை.
இந்த படு தோல்விகளுக்கு ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு 1995ல் நடத்தி வைத்த ஆடம்பர திருமணம்தான் காரணம் என்று கூறப்பட்டது. இத்தனைக்கும் இந்த சுதாகரன் வேறு யாருமில்லை. டிடிவி தினகரனின் சொந்த தம்பி. சசிகலாவோ சித்தி முறை.
அப்படி இருந்தும் கூட 1996ல் நடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஜெயலலிதாவை முக்குலத்தோர் ஏன் கைவிட்டனர். தென் மாவட்டங்களில் 10 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அவர்கள் கணிசமாக இருந்தும் கூட ஏன் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்கான காரணம் புரியாத புதிர்.
இதிலிருந்து ஒரு உண்மையை தெரிந்து கொள்ளலாம். முக்குலத்தோர் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும்பாலும் சாதி ரீதியாக வாக்களிப்பது இல்லை. சட்டப்பேரவைத் தேர்தல்களில் 7 முதல் 12 தொகுதிகளில் வேண்டுமானால் சாதிய அடிப்படையில் வாக்களிக்கலாம்.
தவிர முக்குலத்தோர் எல்லா அரசியல் கட்சிகளிலுமே இருக்கிறார்கள். அது மட்டுமல்ல அத்தனை கட்சிகளும் முக்குலத்தோரைத்தான் வேட்பாளர்களாக நிறுத்தும்.
தொகுதியில் செல்வாக்குள்ள அந்த சமுதாய பிரமுகர்களில் சிலர் சுயேச்சைகளாகவும் போட்டியிடுவார்கள். அவர்களாலும் பெருமளவில் ஓட்டுகள் பிரியும் வாய்ப்பு உண்டு.
அதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவரும் பாஜக கூட்டணிக்குள் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையுமே கைப்பற்றி விடலாம் என்று பாஜகவின் தேசிய தலைமை கருதினால் அதைப்போல தப்பு கணக்கு எதுவும் இருக்காது. இவர்களுக்கான வாக்கு வங்கி தென் மாவட்டங்களில்
உள்ள குறிப்பிட்ட நான்கைந்து தொகுதிகளில் இரண்டு முதல் நான்கு சதவீதம் வரை இருக்கலாம்.
அதேபோல அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட்ட ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், அவருடைய மருமகன் சபரீசனும் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. அந்த ஆடியோவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அண்ணாமலை போட்டு காண்பித்த பிறகே
வெளியிட்டார் என்ற செய்திகளும் உலாவந்தன. அதாவது அமித்ஷாவின் சம்மதம் பெற்ற பிறகே இதை அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கூற்றுப்படி பார்த்தால் சபரீசனும் ஊழல்வாதி என்று அர்த்தம் ஆகிறது.
இத்தகைய சூழலில், சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்க்க சென்ற ஓ பன்னீர்செல்வம், சபரீசனை தனியே சந்தித்து 15 நிமிடங்கள் பேசியதை அண்ணாமலை எப்படி மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் என்பதும் ஓபிஎஸ்க்காக இப்போது ஏன் பரிந்து பேசுகிறார் என்பதும்தான் புரியவில்லை. தவிர சமீப கால அவருடைய நடவடிக்கைகளை அண்ணாமலை கூர்ந்து கவனித்தால் திமுகவுடன் ஓபிஎஸ் மறைமுகமாக கைகோர்த்து இருப்பது தெரியும். அதனால் அவரை நம்பி எப்படி பாஜக தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறிதான்.
மேலும் ஒரே நேரத்தில் திமுகவும், பாஜகவும் ஓபிஎஸ்-ன் செயல்களை ரசிப்பதால் அது தங்களது கட்சிக்கு மறைமுகமாக உதவும் என்று நினைக்கின்றனவோ என்னவோ தெரியவில்லை.
டிடிவி தினகரனை சந்தித்து பேசிய பின்பு கடந்த கால நிகழ்வுகளை இப்போது நினைவு கூர்ந்து பேசுவது சரியல்ல என்று ஓபிஎஸ் கூறுகிறார். சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தியதையும், டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்ததையும்
ஓபிஎஸ் வேண்டுமென்றால் தனது வசதிக்காக எளிதில் மறந்து விடலாம். ஆனால் அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் அதை மறக்க மாட்டார்கள்.
மேலும் கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி சூறையாடியதும், கட்சி அலுவலகங்களின் சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற காட்சியும் அதிமுகவின் உண்மையான தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. அந்தக் காட்சிகள் ஆறாத வடுவாக அவர்களின் மனதில் பதிந்தும் விட்டது. அதை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அவற்றையெல்லாம் மறந்து விடும்படி ஓபிஎஸ் மறைமுகமாக ஒரு பக்கம் கூறுவது இருக்கட்டும். தமிழக பாஜகவும் தேசிய பாஜகவும் ஓபிஎஸ் நிகழ்த்திய இந்த அட்டூழியங்களை ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில்தான் 2017 ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியும், ஓபிஸ்சும் ஒன்று சேர அமித்ஷா நடவடிக்கை எடுத்தார். அதற்குப் பிரதி பலனாக இப்போதும் அதேபோல எதிர்பார்ப்பது சரியல்ல.
அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையான அதிமுகவுடன் கூட்டணியா? அல்லது
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவருடன் கூட்டா? என்பதை பாஜக உடனடியாக தீர்மானிக்க வேண்டும். கடைசி வரை இதில் போக்கு காட்டிக்கொண்டே இருந்தால்
அது திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறும் வாய்ப்புகளே அதிகம்.
இதை புரிந்துகொண்டு பாஜக நடந்து கொள்வதுதான் உத்தமம். இல்லையென்றால் அரசியல் களத்தை குழப்பி விட்டால் நமக்கு நிறைய எம்பிக்கள் கிடைப்பார்கள்.
கட்சியும் தமிழகத்தில் அபார வளர்ச்சி காணும், திமுக எதிர்ப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுகவும் மெல்ல மெல்ல அழிந்து போகும் என்று பாஜக நினைத்தால் அது தவறாகவே முடியும். ஏனென்றால் ஒரே நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்தவர்கள் என்றுமே வெற்றி கண்டதில்லை என்பதுதான் வரலாறு.
தமிழகத்தில் அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு அக்கட்சி இளைஞர்களிடையே குறிப்பிடத்தக்க எழுச்சி கண்டிருப்பது உண்மைதான். அதேபோல பிரதமர் மோடிக்கும் ஓரளவு தனிநபர் செல்வாக்கும் உள்ளது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்து திமுக அரசின் முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதுதான் அக்கட்சிக்கு பலமான தனித்த எதிர்காலத்தை உருவாக்கும்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.