அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான சீட் எண்ணிக்கையை இறுதி செய்த இபிஎஸ்… சூப்பர் பிளானில் அதிமுக.. அங்கீகரித்த டெல்லி பாஜக…?
Author: Babu Lakshmanan8 November 2022, 3:51 pm
இபிஎஸ்
இரு தினங்களுக்கு முன்பு நாமக்கல் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது இரண்டு விஷயங்களை தெளிவுபட கூறி இருந்தார்.
“அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எதிர்த்து சட்டப்பேரவையில் ஓட்டு போட்டவர்தான் ஓ பன்னீர்செல்வம். அதையெல்லாம் மறந்து எதிரிக்கு நாம் வழி விட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அதிமுக அரசுக்கு எதிராக ஓட்டு போட்டவர்களை மீண்டும் இணைத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவி இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியை கொடுத்தது நாம்தான். அதைக் கூட மறந்து தற்போது அதிமுகவுக்கு துரோகம் விளைவித்தவரை என்னவென்று சொல்வது?…
அதிமுக பொதுக்குழு மூலம் நீக்கப்பட்டவர்கள் இணைவோம் என்று பேசுகிறார்கள். இணைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அவரவர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள். பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் இறுதியானது” என்பது அவருடைய ஆணித்தரமான முதல் வாதம்
கூட்டணி
இரண்டாவதாக அவர் கூறிய கருத்து, தற்போதைய அரசியல் சூழலை ஒட்டியதாகும். குறிப்பாக பலராலும் எழுப்பப்படும் 2024 தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு விடை அளிப்பதாக அது இருந்தது!
“எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கூறியிருக்கிறார்.
பாஜக க்ரீன் சிக்னல்
அவர் இப்படி தெரிவித்த மறுநாளே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய மெகா கூட்டணி கருத்தை வரவேற்று இருக்கிறார். “அதிமுக பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்த குழப்பமும் இல்லை. ஏனென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நாங்கள் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம். யார் பலமான கட்சி என்பதையும் நிரூபிப்போம். கூட்டணி குறித்து பாஜக மேலிடம் இறுதி முடிவை எடுக்கும்” என்று கிரீன் சிக்னல்
காட்டியுள்ளார்.
அமமுக தயார்
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்து வரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூட அதிமுகவின் மெகா கூட்டணி யோசனைக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதுதான்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறுகையில், ‘திமுக என்ற தீய சக்தியை வீழ்த்தவேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும், யாராக இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, எந்த மெகா கூட்டணி அமைப்பவராக இருந்தாலும் சரி, கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக எப்போதும் நேசக் கரம் நீட்டுவோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
அண்ணாமலை, டிடிவி தினகரன் இருவருடைய கருத்தும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம், சசிகலா இருவரின் எதிர்கால அரசியல் வாழ்க்கை என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோதே, அதிமுக தலைமையான கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும், அப்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டு ‘பிளான்’களை அவர் வகுத்துக் கொடுத்திருந்ததாகவும் தற்போது, தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லியில் ஓகே
அது பற்றி டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:- தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்படும் கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட இப்போதே சம்மதிக்கிறோம். மீதியுள்ள 30 இடங்களில் அதிமுகவுக்கு 18 பாமகவுக்கு 5,
அமமுக, தேமுதிகவுக்கு தலா 2, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒன்று என பிரித்துக் கொள்ளலாம். டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதிகளை மட்டும் பாஜக முடிவு செய்யட்டும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
திமுக எதிர்ப்பில் ஒரு போதும் தீவிரம் காட்டாத ஓ பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. அதேநேரம் அவரால் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க அவருக்கு வட மாநிலம் ஏதாவது ஒன்றில் ஆளுநர் பதவி வழங்கலாம் என்ற முடிவில் டெல்லி பாஜக இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
டிடிவி தினகரனுக்கு 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பு, ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்களால் சசிகலா திருப்தி அடைந்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பாஜகவை பொறுத்தவரை வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதால் ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் பற்றி டெல்லி பாஜக மேலிடம் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையப்போவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி, கூறுவது போல ஒரு பிரம்மாண்ட கூட்டணி அமைந்து விட்டால் அது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கி விடும்.
கடந்த 2019 தேர்தல் போல வெற்றியும் கிடைக்காது. அதிகபட்சமாக 15 தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும்.
எடப்பாடி பழனிசாமியின் இரண்டாவது திட்டத்தின்படி 2024 தேர்தல் வரை அதிமுக பொதுக்குழு விவகாரம் நீடித்துக்கொண்டே போனால் பாஜக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகளில் தங்கள் தரப்பில் அதிமுக வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதேபோல பாஜகவுடன் இணைந்து போட்டியிடும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்தும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் யாரும் நிற்க மாட்டார்கள், என்கின்றனர்.
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போட்டியிட்டால் அந்த தொகுதிகள் அனைத்திலும் தங்களது பலத்தை நிரூபித்து கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடுவார் என்பது நிச்சயம்.
இதன் மூலம் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை வழிநடத்திச் சென்று, திமுகவுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
அதேநேரம் அதிமுக தொண்டர்களிடம் ஒரு சதவீத ஆதரவு கூட இல்லாத ஓ பன்னீர்செல்வத்தை நம்பி அவருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் ஈடுபட பாஜகவும் தயாராக இல்லை. அதனால் எடப்பாடி பழனிசாமியின் முதல் பிளானை அமித்ஷா ஏற்றுக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகத்தான் நாமக்கலில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அமைந்து இருந்தது. இதன் பின்னணியில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அதை உடனடியாக ஆமோதித்து வரவேற்றும் இருக்கின்றனர் என கருதவும் தோன்றுகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.