கல்வி வியாபாரம் ஆகிவிட்டது… கண்டுகொள்ளாதது போல ஊக்கமளிக்கும் திமுக அரசு : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2024, 10:57 am
கல்வி வியாபாரம் ஆகிவிட்டது… கண்டுகொள்ளாதது போல ஊக்கமளிக்கும் திமுக அரசு : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார், இன்றைய பள்ளிக்கல்வி ,கல்லூரி ஆகிய கல்வி பாடத்திட்டம் எல்லாம் இளைய சமுதாயத்துடைய எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைகிறதா அல்லது அவர்களை சறுக்கிவிடும் வகையில் அமைகிறதா என்பதை அரசுக்கு எச்சரிக்கையுடன் ஆய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறதா?
இந்த வாரம் 12 ஆம் வகுப்பு பத்தாம் வகுப்பு அந்த தேர்வு முடிவுகள் எல்லாம் வெளியாகி மாணவர்கள் எல்லாம் மதிப்பெண்கள் குறித்து விவாதித்துக் கொண்டு தங்கள், எதிர்கால கனவுகளை சென்றடைய பாதை வகுத்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, இன்றைய பாடத்திட்டம் பொது அறிவுதிட்டமாக இருக்கிறதா? குடிமை பயிற்சி என்பதெல்லாம் இதற்கு அடித்தளமாக அமைகிறதா? உள்ளத்தை நாம் ஆரோக்கியமாக வைக்கும் போது உடலையும் ஆரோக்கியமாக இருக்கின்ற கல்வி இருக்கிறதா? இப்படி எல்லாம் நாம் பார்க்கிற போது வரி தவறாமல் அப்படியே எழுதினால் தான் மதிப்பெண் என்ற ஒரு நிலையை நாம் பார்க்கிறபோது இந்த கல்விமுறையில் எதற்கெடுத்தாலும் தேர்வு என்று ஆகிவிட்ட நிலையிலே படிக்கவும் சிந்திக்கவும் இளைய சமுதாயத்திற்கு நேரம் இருக்கிறதா?
தகவல் தொழில்நுட்ப புரட்சியே இன்றைக்கு தங்களை இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு முன்னால் இருக்கிற சவால்கள் எத்தனையோ உள்ளது.
மேலும் படிக்க: மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!
இன்றைக்கு பெற்றோர்கள் விரும்புவதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்கிற ஒரு நிலையை நாம் பார்க்கின்றோம் கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலைசிறந்த அறிவாகும் அறிவாற்றலை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவி தான் கல்வி என்பது எல்லோரும் அறிந்த ஒன்று
அம்மா அரசிலே 2011ல் முதல் முதலாக 14,000 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அன்றைக்கு 14 வகையான கல்வி உபகரணங்களோடு வல்லரசு நாடுகளுக்கு இணையாக மடிக்கணினி வழங்குற திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா ,எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலே வழங்கி ஒரு வரலாற்று சாதனை படைத்தார்.
விமானத்தில் பறக்கின்ற அதானி, அம்பானி , அவர்களுடைய மடியில் இருந்த மடிக்கணியை ஓலை குடிசையில் இருந்த சாமானிய வீட்டு பிள்ளைகளுடைய மடியிலே தவழ செய்து உலகத்தை உள்ளங்கையிலே கொண்டு வந்து ,இந்த கணினி புரட்சியை 15 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்து,அதை எதிர்கொள்வதற்கு பள்ளிக்கூடத்தில் படிக்கிற மாணவர்கள் ,கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் ,பாலிடெக்னிக் படிக்கிறமாணவர்களுக்கு என மடிக்கணினி உட்பட 14 வகையான கல்வி உபகரணங்களையும், சத்துணவு திட்டங்களில் கலவை சாதங்களையும் வழங்கியும், பெண்கல்வி ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொலைநோக்கதுடன் வழங்கினார்.
அதனை தொடர்ந்து எடப்பாடியார் அந்த திட்டங்களை எல்லாம் சீர்தூக்கி 4 கிராம் இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை எட்டு கிராம் ஆக உயர்த்தியும், 52 லட்சம் மாணவ மாணவிகள் ஏழை எளிய சாமானிய விட்டு பிள்ளைகள் பயன் பெறுகிற வகையில் மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தி காட்டி, உயர் கல்வி சேர்க்கையில் 54 சதவீதத்திற்கும் மேலே மத்திய அரசை விஞ்சி உலகத்தரம் வாய்ந்த நற்சான்றிதழை எடப்பாடியார் பெற்றுத் தந்தார்.
கல்வியை வியாபாரமாகாமல் தடுப்பதற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார், மாணவர்கள் மதிப்பெண்ணை வைத்து தனியார் பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது, படித்து கஷ்டப்பட்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகத்தால் என எல்லோரும் ஒன்று கூடி பெறுகிற மதிப்பெண்ணை எல்லோருடைய கூட்டுப் பொறுப்பில் அந்த குழந்தை பெறுகிற மதிப்பெண்ணை தனியார் பள்ளிகள் விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதை அன்றைக்கு எடப்பாடியார் கல்வியை வியாபாரம் ஆக்குவதை கண்டித்து அதை தடை செய்தார்.
ஆனால் இந்த ஒரு வார காலம் பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி நாம் பார்க்கிறோம் பக்கம்,பக்கமாக விளம்பரத்திற்காக பயன்படுத்துகிற ஒரு நிலையை பார்க்கிற போது அது மீண்டும் கல்வி வியாபாரம் ஆவதை அரசு கண்டு காணாமல் இருக்கிறதா? அல்லது அரசே ஊக்கப்படுத்துகிறதா ?
ஒரு மாணவர் பெறுகிற மதிப்பெண் என்பது பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தால், நண்பர்கள் என்று அனைவரின் கூட்டு பொறுப்பாக இருக்கிறபோது அதை அந்த பள்ளி மட்டுமே அந்த நிர்வாகத்தினுடைய ஒட்டுமொத்த கிரெடிட் அவர்களுக்கு எடுத்துக் கொள்வது என்பது கல்வி வியாபாரம் என்கிற அச்சம் ஏற்படுகிறது.
ஆகவே இந்த அரசு மடிக்கணினி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முன்வருமா ?தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக பெண் கல்வி ஊக்குவிப்பதற்கு மீண்டும் இந்த அரசு முன்வருமா ? அதேபோல் கல்வி வியாபாரம் ஆவதை இதை தடுத்து நிறுத்துமா அல்லது அதை முறைப்படுத்த இந்த அரசு முன்வருமா?
ஒரு மனிதநேயமிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கு நம்முடைய கல்வி பயன்படக்கூடிய வகையிலே நடவடிக்கை எடுத்து இந்த அரசு முன்வரவேண்டும் என கூறினார்.