அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி… தேர்தல் ஆணையத்தின் செயலால் குஷியான அதிமுக தொண்டர்கள்..!!!
Author: Babu Lakshmanan11 July 2023, 10:46 am
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.
அதிமுகவில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டதையடுத்து, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, அதிமுகவுக்கு பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்றும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினர். இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்ததை காட்டுவதாக அமைந்துள்ளது.