இனி வாக்குறுதிகளை அள்ளி வீச முடியாது… அரசியல் கட்சிகளின் அடிமடியிலேயே கைவைத்த தேர்தல் ஆணையம்…!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 6:30 pm

தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு புதிய விதிகளை வகுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தலில் வென்று எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது அரசியல் கட்சிகளின் நோக்கமாகும். இதற்காக, தங்கள் கட்சியின் கொள்கைகள், வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளியிடுவார்கள். இதுபோன்று அறிவிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள், சில சமயங்களில் வெற்றி தோல்வியைக் கூட தீர்மானித்துள்ளன.

ஆனால், இப்போதெல்லாம் அரசியல் இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அள்ளி விடுவதாகவும், ஆனால், அதனை நிறைவேற்றுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, இலவசங்களால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளது.

ஆனால், இப்போதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் என்பது இஷ்டத்திற்கு இருப்பதாகவும் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் அள்ளிவிட்டு வருவதாகவும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். தேர்தல் வெற்றியை மட்டுமே அரசியல் கட்சிகள் இலக்காக வைத்துச் செயல்படுவதால் சில சமயங்களில் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை எல்லாம் தருவதாக விமர்சனம் எழுந்து உள்ளது.

இந்த நிலையில், தேர்தலின் போது அளிக்கப்படும் இலவச வாக்குறுதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், தேர்தல் சமயங்களில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது ஏற்படும் பொருளாதார பாதிப்பு, அதை நிறைவேற்றத் தேவையான நிதியை அளிக்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்படி அறிவிக்கும் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து கட்சிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், இந்த விஷயத்தில் கட்சிக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை என்றே கருதப்படுவதாகவும், எனவே, தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு எங்கிருந்து நிதி வரும் என்பதைக் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் விவரிக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புதிய விதிமுறைகள் தொடர்பாக அக்டோபர் 19ஆம் தேதிக்குள் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…