மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து வரும் 16ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்று எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.
மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கெனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின்
கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள்.திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, மின் கட்டண உயர்வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்தவிதமான முயற்சியையும் எடுக்காதபோதே, மின் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என்று பொய்யான பரப்புரையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்த திமுக, இன்றைக்கு ஆளுங்கட்சியாக வந்த பிறகு மக்கள் நலனை மறந்து இதுபோன்றதொரு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது.
“மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்” என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப, ஆட்சியில் இல்லாதபோது, ‘மக்கள் நலம், மக்கள் நலம்’ என்று கபட நாடகத்தை அரங்கேற்றிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தம் மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியில், மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு படிக் கணிணி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவித் தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிய அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.
மாறாக இந்த விடியா திமுக அரசு, அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முடக்கியதோடு, சொத்து வரியையும், மின் கட்டணத்தையும் உயர்த்தி, இன்றைக்கு மேலும் மக்களை துன்பக் கடலில் ஆழ்த்தி, என்றைக்குமே விடியாது என்ற நிலைக்கு இந்த அரசு சென்றுகொண்டிருப்பதை உணர்த்துகிறது.
“மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆனாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும்”, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், 16.09.2022 – வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில், ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனை முன்வைத்து, கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் இந்த விடியா திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். வருகின்ற 16.09.2022 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் 22.09.2022 – வியாழக் கிழமை நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.