கை நழுவும் பட்டியலின மக்கள் ஓட்டு : அதிர்ச்சியில் மூழ்கிய திமுக, காங்.

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 8:27 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறந்து வருகிறது.

காங்., மிஞ்சிய திமுக

ஆளும் திமுக தனது 21 மாத ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறது. அங்கு போட்டியிடும் காங்கிரஸ் கூட இந்த அளவிற்கு ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.

திமுக அமைச்சர்கள் பட்டாளமே திரண்டு வந்து தீவிர தேர்தல் பணியாற்றுகிறது. அவர்களுடன் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் கைகோர்த்துக்கொண்டு கட்சி தொண்டர்களுடன் வாக்காளர்களை தினமும் மிகச் சிறப்பான முறையில் கவனித்தும் வருகின்றனர்.

திரும்பிய பக்கமெல்லாமல் அரசியல் தலைகள்

அதேபோல அதிமுக சார்பில் போட்டியிடும் கே எஸ் தென்னரசுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் எங்கு பார்த்தாலும் கட்சிக்காரர்களின் தலைதான் தென்படுகிறது.

அதிமுக அதிரடி பிரச்சாரம்

திமுகவின் 21 மாத கால ஆட்சியில், பெயரளவிற்கு ஒரு சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, கேஸ் சிலிண்டர் மானியம்100 ரூபாய், நீட் தேர்வு ரத்து, கல்லூரி மாணவ, மாணவிகளின் வங்கிக் கல்விக் கடன் ரத்து, டீசல் விலை லிட்டருக்கு
4 ரூபாய் குறைப்பு, பெட்ரோலுக்கு மேலும் 2 ரூபாய் குறைப்பு, விவசாயிகளின் ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் போன்ற ஏராளமானவற்றை நிறைவேற்றவில்லை என்பதை வாக்காளர்களுக்கு நினைவூட்டும் விதமாக அதிமுகவினர் அதிரடி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

அத்துடன் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் மலிந்துபோய் விட்டன என்பதையும் அதிமுக தனது தேர்தல் அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறது.

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு

அதிலும் குறிப்பாக மாநிலத்தில் போதைப் பொருள் தாராள நடமாட்டம், பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளின் அடாவடி செயல்கள், அத்து மீறல்கள் பட்டியலின மக்களுக்கு நிகழ்த்தப்படும் சமூக அநீதிகள் ஆகியவை குறித்தும்
பட்டியல் போட்டு அதிமுக பிரச்சாரம் செய்கிறது.

இத்தொகுதியில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட காங்கிரசுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் கடும் பலப் பரீட்சையே நடக்கிறது.

ஆளுநர் ஆர்என் ரவி வேதனை

இந்த பரப்பரப்பான நிலையில்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து போய் இருப்பதை ஆளுநர் ஆர் என் ரவி வேதனையோடு வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பிரதமர் மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கிறோம்? நமது மாநிலத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம். ஆனால், அதற்கு அடுத்த நாளே பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டது, கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பது போன்ற சம்பவங்கள் வேதனையளிக்கின்றன.

தப்பிக்கும் பாலியல் குற்றவாளிகள்

அதேபோல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக்கொண்டால் யாரும் கைது செய்யப்படுவது இல்லை. அதோடு குற்றவியல் நடைமுறை சட்டம் மிக மோசமானதாக உள்ளது. நமது மாநிலத்தில் இவ்வாறு நடப்பது வலியை ஏற்படுத்துகிறது. பட்டியலின பெண்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் பேரை காவல்துறை சுதந்திரமாக விட்டுவிடுகிறது.

இந்த நிலையில் நாம் சமூகநீதியைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். பட்டியலின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 30 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியத் தொகை வேறு திட்டங்களுக்காக செலவழிக்கப்படுவதாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது. ஆனால் நாம் சமூகநீதியைப் பற்றி பேசுகிறோம்” என்று அதிருப்தியுடன் குறிப்பிட்டார்.

திமுகவுக்கு சாட்டையடி

ஆளுநர் ரவி பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் அண்மைக்காலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்து வெளிப்படையாகவே பேசியிருப்பது நாங்கள்தான் சமூக நீதியின் ஒரே பாதுகாவலன் என்று எந்த நேரமும் வாய் நிறைய பேசும் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவற்றுக்கும் நீங்கள் ஏன் இதுபற்றி எல்லாம் இப்போது பேச மறுக்கிறீர்கள்? என மறைமுகமாக சாட்டையடி கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஆளுநர் ரவி தனது மனக்குமுறலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேரத்தில் வெளியே கொட்டித் தீர்த்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகவும் பேசப்படுகிறது.

வாயை திறக்காத கூட்டணி கட்சிகள்

பொதுவாக ஆளுநர் ரவி எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆராய்ந்த பிறகு பேசுவதுதான் வழக்கம். அது சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தால் அதற்கு உடனடியாக
தமிழக காங்கிரஸ், விசிக மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள்தான் கண்டனம் தெரிவிக்கும்.

ஏனென்றால் ஆளும் திமுக அரசு, தனது கட்சி சார்பில் மூத்த அமைச்சர்களையோ தலைவர்களையோ வைத்து இது தொடர்பாக நேரடியாக எதிர்கருத்தை பதிய வைத்தால் அது அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் ஆளுநர் ரவி, திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவது பற்றி வேதனையோடு கருத்து தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட திமுகவின் கூட்டணி கட்சிகள் அதுபற்றி இது வரை வாயே திறக்கவில்லை.
அக் கூட்டணியில் உள்ள 12 கட்சிகளும் கப்சிப் ஆகி விட்டன.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

“ஆளுநர் ரவி இப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேரத்தில் பேசி இருப்பதில் பல அர்த்தங்கள் உண்டு. அதை அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனின் இழுபறி வெற்றியைக் கூட தடுத்து விட முடியும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் பேசியிருப்பதை கூர்ந்து கவனித்தால் பட்டியல் இன மக்களுக்கு அண்மைக்காலமாக திமுக ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டு வருவதை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை, கையாளவும் இல்லை என்று கூறுவதைப் போல உள்ளது. வேங்கை வயலில் பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கூட இதுவரை குற்றவாளிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை.

பட்டியலின வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு?

அதேபோல பட்டியலின பெண்கள் தொடர்புடைய பாலியல் குற்றங்களில் 100 பேர் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால் அவர்களில் 93 பேர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி வெளியே சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்ற தகவலையும் ஆளுநர் ரவி ஆழமாக பதிவிடுகிறார். இதன் மூலம் தமிழக காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனத்தை ஆளுநர் ரவி மறைமுகமாக வைக்கிறார்.

இந்த இரண்டையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தீவிர பிரசாரமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்லாமல் சொல்வதைப்போலவும் இருக்கிறது. ஏனென்றால் இந்த தொகுதியில் பட்டியலின வாக்காளர்கள் மட்டும் 30 ஆயிரம் பேர் உள்ளனர்.

அதிமுக வெற்றி உறுதி

இது தொடர்பாக போதிய விழிப்புணர்வை இவர்களிடம் ஏற்படுத்தினாலே அந்த ஓட்டுகள் அனைத்தும் காங்கிரஸுக்கு எதிராக திரும்பிவிடும் என்பதும் இது போன்ற நிலை ஏற்பட்டால் எடப்பாடி பழனிசாமி நிறுத்தி இருக்கும் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவின் வெற்றி உறுதியாகிவிடும் என்பதும் நிதர்சனமான உண்மை.

அதேநேரம் புதுக்கோட்டை வேங்கை வயல், சேலம் திருமலைகிரி ஆகிய இரண்டு கிராமங்களிலும் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை இடைத்தேர்தலில் அதிமுக முக்கியமான தொரு பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்து விடக்கூடாது என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மனதுக்குள் வேண்டிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

திமுக அரசை சூசமாக வெளுத்த ஆளுநர்?

அதனால்தான் ஆளுநர் ஏன் இந்த நேரத்தில் சமூக அநீதி பற்றி பேசினார் என்று திமுக கூட்டணி கட்சிகள் குழப்பம் அடைந்தும் உள்ளன. அதனால் ஈரோட்டில் தேர்தல் நடந்து முடியும் வரை ஆளுநர் ரவிக்கு எதிராக திமுகவோ, காங்கிரஸோ அந்தக் கூட்டணியில் இடம் பிடித்துள்ள வேறு கட்சிகளோ மறந்தும் கூட பதில் அளிக்க மாட்டார்கள். ஆளுநர் விவகாரத்தில் எப்போதும் கொந்தளித்த மனநிலையில் இருக்கும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும், விசிக தலைவர் திருமாவளவனும் கூட அடக்கியே வாசிப்பார்கள். இதை கண்டு கொள்ளவும் மாட்டார்கள்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.

எது எப்படியோ, கடந்த மாதம் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடந்த சில நிகழ்வுகளுக்கு பிறகு பிறகு ஆளுநர் ரவி மீண்டும் திமுக அரசை சூசகமாக விமர்சிக்க தொடங்கி விட்டார் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

அதேநேரம் பட்டியல் இன மக்களின் 30 ஆயிரம் ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைக்காத சூழ்நிலையையும் இது உருவாக்கி விட்டுள்ளது என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்!

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 347

    0

    0