அம்மாவின் துணிச்சலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி… எஞ்சிய 6 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் : பேரறிவாளன் விடுதலை குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டறிக்கை

Author: Babu Lakshmanan
18 May 2022, 3:20 pm

பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும்‌, தொலைநோக்கு சிந்தனைக்கும்‌, சட்ட ஞானத்திற்கும்‌ கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 30 ஆண்டு காலமாக சிறையில்‌ இருந்த திரு. பேரறிவாளன்‌ அவர்களை உச்சநீதிமன்றம்‌ இன்று (18.5.2022) விடுதலை செய்திருப்பது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்‌, மனநிறைவையும்‌, நிம்மதியையும்‌ தருகிறது.

அமரர்‌ ராஜீவ்காந்தி அவர்கள்‌ படுகொலை செய்யப்பட்ட வழக்கில்‌ கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில்‌ அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன்‌ அவர்கள்‌ விடுதலை செய்யப்பட வேண்டும்‌. அந்த வழக்கில்‌ சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும்‌ நீதி வழங்க வேண்டும்‌ என்பதற்காக புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ மேற்கொண்ட முயற்சிகள்‌, எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள்‌ கொஞ்ச நஞ்சமல்ல.

“மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்‌, மாநில அமைச்சரவையின்‌ தீர்மானத்தின்படி பேரறிவாளனையும்‌, அவரோடு இந்த வழக்கில்‌ சம்பந்தப்பட்டிருக்கும்‌ மற்ற 6 பேர்களையும்‌ எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும்‌” என்று 2014-ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ சட்டமன்றத்தில்‌ அறிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றோம்‌.

ராஜீவ்காந்தி அவர்கள்‌ கொலை வழக்கில்‌ சம்பந்தப்பட்ட மற்ற 6 பேர்களும்‌ விடுதலை செய்யப்பட வேண்டும்‌ என்பதை புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களும்‌, அவரைத்‌ தொடர்ந்து 2018-ல்‌ அம்மா அவர்களின்‌ வழிநடந்த கழக அரசும்‌ துணிச்சலாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌ நடைபெற்ற அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவு தான்‌ இன்றைய உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பிற்கு அடித்தளமாகும்‌. இது முழுக்க, முழுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்திற்குக்‌ கிடைத்த வெற்றிதான்‌ என்பதையும்‌ இந்தத்‌ தருணத்தில்‌ நாங்கள்‌ எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறோம்‌.

திரு. பேரறிவாளன்‌ அவர்களை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம்‌ அறிவித்துள்ள நிலையில்‌, அவரை உடனே விடுதலை செய்யவும்‌, மேற்படி உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ மீதமுள்ள 6 பேர்களை உடனடியாக விடுதலை செய்யவும்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 730

    0

    0