அதிமுகவில் மீண்டும் இணைய இபிஎஸ் அழைப்பு : பரபரப்பை கிளப்பிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்!!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2023, 12:28 pm
தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்தனர். வரிசையாக அதிமுகவில் நிர்வாகிகள் பலர் இணைந்தனர். இதையடுத்து அதிமுக மீது பாஜகவினர் கடுமையான புகார்களை வைத்தனர்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறியது நெருடல் அளிக்கிறதா என்று கேட்டால் ஆம் நெருடல் அளிக்கிறது. எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பாஜகவில் பயணிப்பதில் எனக்கு வருத்தம் இல்லை. நெருடல் இல்லை. ஆனால் அதிமுகவில் இருந்து வெளியேறியது நெருடல் அளிக்கிறதா என்று கேட்டால் ஆம் நெருடல் அளிக்கிறது. எனக்கு வருத்தம் அளிக்கிறது.
முக்கியமாக என்னை ஜெயக்குமார் மீண்டும் கட்சிக்குள் அழைத்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கட்சிக்குள் அழைத்தார். எனக்கு எடப்பாடி பழனிசாமி நெருங்கிய நண்பர். எனக்கு அவர் மிகவும் நெருக்கம்.
என்னை ஏற்கனவே எடப்பாடி மீண்டும் கட்சிக்குள் அழைத்தார்.
எடப்பாடி பழனிசாமியா, ஓ பன்னீர்செல்வமா என்றால் நான் எடப்பாடியைத்தான் சொல்வேன். ஏன் என்றால் எடப்பாடி எனக்கு நெருங்கிய நண்பர். சொல்லப்போனால் நான் தொழிற்துறை அமைச்சராக இருந்த போது எனக்கு கீழ் 15 பிரிவுகள் இருந்தன.
அந்த கார்பரேஷனில் எடப்பாடி சேர்மேனாக இருந்தார். அப்போது அவர் தேர்தலில் வெற்றிபெறவில்லை. அவர் என்னைவிட சீனியர்தான். ஆனாலும் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதால் அவர் அந்த பொறுப்பில் இருந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருந்தேன்.
அவருடன் நெருக்கம் இருக்கிறது. ஆனால் அதிமுகவில் இணைய மாட்டேன். மீண்டும் அதிமுகவில் சேர மாட்டேன். அவர் என்னை அழைத்தார். ஆனாலும் சேர மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
அதிமுகவில் இனியும் சேர மாட்டேன். திமுகவில் சேரவும் வாய்ப்புகள் இல்லை. அப்பாவு அழைத்தாலும் செல்ல மாட்டேன். யார் அழைத்தாலும் செல்ல மாட்டேன்.
நான் அரசியல் ரீதியாக சிலருடன் நட்புடன் இருக்கிறேன். சிலருடன் அன்பாக இருக்கிறேன். அரசியல் கடந்து நட்பாக இருக்கிறேன். அதனால் நான் கட்சி மாற போவதாக சிலர் சொல்கிறார்கள்.
அதிமுகவில் இருந்தே போதே நான் திமுக செல்வேன் என்று கூறினார்கள். நான் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று சிபாரிசு கேட்க மாட்டேன். அதை கேட்காமல் நட்பாக மட்டுமே இருப்பேன். அதனால் என்னை பற்றி அப்படி பேசுகிறார்கள், என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.