பூர்வகுடி மக்களை வெளியேற்றி சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை, காவல்துறை ; இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 12:31 pm

பூர்வகுடி மக்களை வெளியேற்றி சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை, காவல்துறை ; இபிஎஸ் கண்டனம்!

கடந்த 10ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே வனப்பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்கள், கால்நடை வளர்ப்பவர்களை வெளியேறுமாறு வனத்துறை அறிவுறுத்தி வருகிறது. கடந்த மாதம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை வனத்துறையினர் வெளியேற சொன்னதால், அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு… இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஆந்திரா, தெலங்கானா!

இந்த நிலையில், ஒக்கேனக்கல் அருகே உள்ள மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.மீனவர்களாகவும் கல்நடை வளர்ப்பு உள்ளிட்ட வேலைகளிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

கடந்த 10ஆம் தேதி 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று வலுக்கட்டாயமாக ஆபூர்வகுடி மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வீடுகளில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியதோடு, பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற வைத்தனர். இதில் சில பெண்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் அராஜ போக்குடன் வலுக்கட்டாயமாக பூர்வ குடிமக்களை வெளியேற்றிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றனர். திமுக அரசு மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட விடியா திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம்.

மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 314

    0

    0