ஒரே நேரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த இபிஎஸ், கனிமொழி : வளையல் கடையில் குவிந்த பெண் எம்பிக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2023, 11:30 am
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவர் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் எம். பிக்கள் ஏகே பி சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தாளரிரெங்கையா, அப்துல்லா, திருமதி. கீதாபென்வாஜெசிங்பாய்ரத்வா, ஷியாம் சிங் யாதவ், உள்ளிட்ட 11பேர் உள்ளிட்ட எம்பிக்கள் குழுவினர் மதுரை விளாச்சேரி மற்றும் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இன்று காலை தமிழக முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது குறித்து சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். எம்பிக்கள் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு உணவு பரிமாறினர்.
அப்பொழுது உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் தொகுதி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) மக்களவை கட்சி தலைவராகவும் உள்ள ஷியாம் சிங் யாதவ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கும் உணவை சாப்பிட்டு பார்க்க விரும்புவதாக தெரிவித்தவருக்கும், எம்பிக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
உணவை சாப்பிட்ட எம்பிக்கள் காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பான திட்டம் என்றனர். எம்பி ஷியாம் சிங் யாதவ் கல்வி பயிலும் குழந்தைகள் நலனில் அக்கறையுடன் திட்டத்தைச் செயல்படுத்தும் முதல்வருக்கு பாராட்டுதலையும், வாழ்த்துகளையும், தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் நெல்பேட்டை பகுதியில் உள்ள சமையல் அறை க்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்த எம்பிக்கள் தரிசனம் முடித்தபிறகு பெண் எம்பி கீதாபென்வாஜெசிங்பாய்ரத்வா மற்றும் உடன் வந்த ஆண் எம்பிக்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு அருகிலிருந்த வளையல் கடைக்குச்சென்று வளையல்கள், உள்ளிட்ட அவர்கள் விரும்பும் பொருட்களை கனிமொழி எம்பி வாங்கிக் கொடுத்தார்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எம்பிகள் வளையல் கடைக்கு சென்று வளையல் வாங்கியதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்து சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சால்வை அணிவித்து வரவேற்றார்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்க்கையில், முன்னால அமைச்சர் செல்லூர் ராஜு சால்வை அணிவித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று தான் மதுரையில் அதிமுக சார்பில்பிரமாண்ட மாநாடு ஒன்று நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தான் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் இபிஎஸ் விமானம் மூலம் சென்னை புறப்பட உள்ளார்.