ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் இபிஎஸ் : தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க முடிவு.. வேற லெவல் பிளான்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 8:21 pm

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு தரப்பில் இருந்தும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதே வேளை ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்து உள்ளார்.

இப்படி இரு தரப்பும் தனித்தனியே வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அந்த நோட்டீசை முறைப்படி பூர்த்தி செய்து 5-ந்தேதி (இன்று) இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார். அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் ‘நோட்டரி பப்ளிக்’ சான்றுடன் இணைத்து, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஏறக்குறைய 85 % பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், கணக்கிடும் பணி முடிந்த பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதம் நாளை காலை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும் பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை நாளை காலை டெல்லி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…