திமுக போடும் தேர்தல் கணக்கு.. திடீரென விட்டுக் கொடுத்தது ஏன்…?காங்கிரசை பணிய வைக்கும் முயற்சியா…?

Author: Babu Lakshmanan
20 January 2023, 4:56 pm

இடைத்தேர்தல்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 4-ம்தேதி திடீரென மரணம் அடைந்ததால் காலியாக உள்ள அந்த தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்பார்த்து இருந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களுடன் இணைத்து நடத்தப்படுவது அந்த கட்சிகளுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்து இருக்கும்.

காங்கிரஸ்

ஏனென்றால் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் முன்னணி அரசியல் கட்சிகள் கூட்டணி விஷயத்தில் உடனடியாக ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டு விட்டன.

அதேநேரம், மரணமடைந்த ஈவெரா திருமகன் காங்கிரஸ்காரர் என்பதாலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் என்பதாலும் இந்த தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட தீவிர முனைப்பு காட்டியது.

இது தொடர்பாக திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலினை மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்தித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட திமுக தலைமை கிரீன் சிக்னலும் காட்டிவிட்டது.

ஏற்கனவே 2021-ம் ஆண்டு காங்கிரஸ் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால், தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டு
உள்ளதாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக அறிவித்து இருக்கிறது.

பின்வாங்கியது ஏன்..?

இது தமிழக அரசியல் களத்தில் மிகுந்த ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்களுக்குப் பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அரசின் மீது மக்களுக்கு எந்த அளவிற்கு ஈர்ப்பும், எதிர்ப்பும் உள்ளது என்பதை அறிந்துகொள்ள இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இதனால் திமுகதான் போட்டியிடும் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவியது. திமுக நிர்வாகிகளில் பெரும்பாலானோரின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

இந்த பரபரப்பான சூழலில் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த 14 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது ஆயத்த பணிகளை தொடங்கியும் விட்டது.

தொகுதியில் 52 இடங்களில் அமைக்கப்படும் 238 வாக்குச் சாவடிகளில் 500 மின்னணு ஓட்டு பதிவு எந்திரங்களும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவை என்பதும் குறித்தும் தேர்தல் ஆணையம் கணக்கெடுத்து வருகிறது.

CM Stalin - Updatenews360

இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 440 பேரும் உள்ளனர். அதாவது ஆண் வாக்காளர்களை விட பெண்கள் சுமார் 6000 பேர் அதிகம். மொத்தத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

இடைத்தேர்தல் என்றாலே, வாக்காளர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட முறையில் திருமங்கலம் பார்முலா பாணியில் சிறப்பு கவனிப்புகள் உண்டு என்பது
தமிழக மக்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

அதுவும் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ள தொகுதி என்றால் அதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கணிசமான பணப் பட்டுவாடாவுடன்
தங்க மூக்குத்தி, கம்மல் வெள்ளி கொலுசு, மிக்சி, கிரைண்டர், டிவி, ஸ்மார்ட் போன் என்று ஏகப்பட்ட அன்பளிப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு வழங்குவதும் தாராளமாக அரங்கேறும். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி பெண் வாக்காளர்களுக்கு ஜாக்பாட் ஆக அமையலாம்.

இது ஒரு புறம் இருக்க இடைத்தேர்தலில் போட்டியிட்டு திமுக தனது வலிமையை நிரூபிக்கும் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில் அறிவாலயம் திடீரென பின்வாங்கியது ஏன் என்பதுதான் தமிழக அரசியலில் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

அரசியல் கணக்கு

இதற்கு பல காரணங்களை அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை மதிக்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். கனிவு, பெருந்தன்மை, கூட்டணி தர்மத்துடன் நடந்தும் கொள்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது அவர் நல்ல நட்புறவும் கொண்டுள்ளார். தற்போதுள்ள கூட்டணியே 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நீடிக்கவேண்டும் என்பது ஸ்டாலின் விருப்பமாகவும் இருக்கிறது. அதனால்தான் அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் முந்தைய தேர்தல் போலவே காங்கிரஸ் போட்டியிடட்டும் என்று உறுதியாக கூறிவிட்டார் என்கின்றனர்.

அதேநேரம், இப்போது விட்டுக் கொடுத்து இருப்பதன் மூலம் 2024 தேர்தலில் திமுக ஒதுக்கீடு செய்யும் நாடாளுமன்ற தொகுதிகளைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் தமிழக காங்கிரசுக்கு ஏற்படும் என்ற கோணத்திலும் இதைப் பார்க்கலாம்.

அதனால் திமுகவிடம் 15 தொகுதிகளையாவது கேட்டு பெற வேண்டும் என்கிற தமிழக காங்கிரஸின் எண்ணம் ஈடேறுமா என்பது சந்தேகமே! குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளை திமுக ஒதுக்கும் வாய்ப்புகளே அதிகமாக தென்படுகிறது. ஒருவேளை டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டால் ஓரிரு தொகுதிகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பும் உண்டு.

இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான் திமுக ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளது என்ற பேச்சும் உள்ளது.

இன்னொரு பக்கம் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைப்பு, பெட்ரோலுக்கு மேலும் இரண்டு ரூபாய் குறைப்பு, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு வங்கி கல்வி கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்பனவற்றை திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு மேலாகியும் நிறைவேற்றவில்லை என்ற கடும் அதிருப்தியில் தமிழக மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

anna arivalayam- updatenews360

மேலும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து வெடித்த கலவரம், 15க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள், கஞ்சா போதை பொருள் தாராள நடமாட்டம், அன்றாடம் கொலை, கொள்ளை, சிறுமிகள், இளம் பெண்களுக்கு கூட்டு பாலியல் பலாத்கார கொடுமைகள் அதிகரிப்பு, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரம், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் ஆகியவை சட்டம் ஒழுங்கு சீர்குலைவு விவகாரங்களாகவும், சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை கடும் உயர்வு உள்ளிட்டவை மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளாகவும் இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளால் தீவிர பிரச்சாரமாக மேற்கொள்ளப்படும் நிலையும் காணப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், திமுக நேரடியாக இடைத்தேர்தலை சந்தித்தால் அது கடும் சவாலாகவே இருக்கும். என்னதான் வாக்காளர்களை சிறப்பாக கவனித்தாலும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை திக் திக் மனநிலையில்தான் இருக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும்.

1991க்கு பிறகு தமிழகத்தில் ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் தோற்றதில்லை என்று கூறப்பட்டாலும் கூட அந்த ரிஸ்க்கை திமுக எடுக்க விரும்பவில்லை என்று ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் போட்டியிட அனுமதித்து விட்டால் வெற்றியோ, தோல்வியோ அதற்கான முழு பொறுப்பும் அந்தக் கட்சியை போய் சேர்ந்து விடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதேநேரம் இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆளும் கட்சிக்கு கௌரவ பிரச்சினையான ஒன்று என்பதால் திமுகவினர் காங்கிரசுக்காக தீவிர ஓட்டு வேட்டையில் இறங்குவார்கள் என நிச்சயமாக சொல்லலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 432

    0

    0