ஈரோட்டில் மாயமான பாஜக, விசிக கொடிகள்… திமுக, அதிமுக கூட்டணியில் சலசலப்பு…?

Author: Babu Lakshmanan
16 பிப்ரவரி 2023, 6:10 மணி
Quick Share

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் களைகட்டி உள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக, திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்ற செய்திகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இத்தனைக்கும் திமுகவில் 25 அமைச்சர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். அவர்களுடன் கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

இதுதவிர தொகுதிக்குள் 120 வீதிகளில் கூடாரங்கள் அமைத்து
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்காளர்களுக்கு தினமும் காலையில் டிபன், மற்ற இருவேளைகளுக்கு பிரியாணி, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் என பல்வேறு விசேஷ உபசரிப்பு அளித்து அவர்களை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் ஓட்டு கேட்க நெருங்க முடியாத அளவிற்கு கண்கொத்தி பாம்பு போல கண்காணித்தும் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் போட்டியிடும் கேஎஸ் தென்னரசுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகத் தேர்தல் ஆணையத்தின் காதுகளில் விழுமாறு இந்த குற்றச்சாட்டை அதிரடியாக உரக்க முன் வைத்தார்.

அதேநேரம் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை கௌரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ள திமுக கடந்த
15 நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதிமுகவினர் கடந்த 7ம் தேதி முதல் வாக்கு சேகரிப்பதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கொடிகள்

இப்படி இரு தரப்பிலும் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டாலும் கூட கூட்டணி கட்சிகளின் கொடிகளை தெருக்களில் ஏந்திச் செல்வதில் ஒற்றுமை இல்லாத நிலையையும் காண முடிகிறது.

வாக்கு சேகரிப்பின் போது 100 பேர் கொடியை ஏந்திச் செல்கின்றனர் என்றால் அதில் 85 கொடிகள் திமுகவினுடையதாக இருக்கிறது. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டும் கூட அக்கட்சியின் கொடியை கைகளில் பிடித்து செல்பவர்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளனர். அப்படி இருக்கும்போது மற்ற கட்சிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

அதேபோல் சாலையோரங்களிலும் திமுக கொடிகள் மட்டுமே அதிகமாக காட்சியளிக்கின்றன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகள் ஒன்றிரண்டை மட்டும் பார்க்க முடிகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகள் அதிகமாக கட்டப்பட்டுள்ளன.

ஆனாலும் தொகுதியில் திமுகவினர் பிரச்சாரத்திற்கு செல்லும்போது கூட்டணி கட்சியான விசிகவின் கொடி ஒன்று கூட கண்களில் தென்படாத விசித்திர நிலைதான் உள்ளது.
இதனால் விசிகவை திட்டமிட்டே திமுக புறக்கணிக்கிறதா?… அல்லது விசிக நிர்வாகிகளும் தொண்டர்களும், திமுகவின் வாக்கு சேகரிப்பில் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லையா?…என்ற கேள்விகளும் எழுகின்றன.

எப்படி இருந்தாலும் திமுக நம்மிடம் ஓட்டுக்காக வந்தே ஆக வேண்டும் என்ற ஆணவம் உள்ளூர் விசிகவினரிடம் இருக்கிறதா?… என்பதும் புரியவில்லை. ஏனென்றால் இந்த தொகுதியில் பட்டியலின மக்களின் ஓட்டுகள் மட்டும் 30 ஆயிரம் உள்ளன.
அதேநேரம் விசிகவினரை அவர்களது கட்சி கொடியுடன் ஓட்டு சேகரிக்க அழைத்து சென்றால் மற்ற வகுப்பினரின் ஓட்டுகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று திமுக அஞ்சுகிறதா? என்பதும் தெரியவில்லை.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் திமுக- விசிக கட்சிகளிடையே ஒரு இணக்கமான சூழல் இல்லை என்றே கருதத் தோன்றுகிறது.

அதிமுக கூட்டணி

திமுக கூட்டணியில்தான் இப்படி என்றால் அதிமுக கூட்டணியிலும் இது போன்றதொரு அசாதாரண நிலை இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆம், அதிமுகவினர் வாக்கு சேகரிப்புக்காக செல்லும்போது அதன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகளின் கொடிகளை பலரும் எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. இதில் அதிமுக கொடிகள்தான் மிக அதிகம் என்றாலும் கூட்டணியின் பிரதான கட்சியான பாஜகவின் கொடிகளை ஒரு இடத்தில் கூட பார்க்க முடியவில்லை.

இத்தனைக்கும் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்பு இத் தொகுதி இளைஞர்களிடையே பாஜகவின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அப்படி இருந்தும் அதிமுகவினரின் ஓட்டு வேட்டையின்போது, பாஜகவின் கொடிகளை பார்க்கவே முடியாத நிலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பாஜகவினருடன் சென்று ஓட்டு சேகரித்தால் அது சிறுபான்மையினரிடம் வேட்பாளர் கே எஸ் தென்னரசுவுக்கு கிடைக்கக்கூடிய ஓரளவு ஓட்டுகளையும் விழாமல் செய்து விடுமோ என்ற அச்சம் அதிமுக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

அதேபோல அதிமுக வேட்பாளரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதில் டெல்லி பாஜக மேலிடம் காட்டிய தயக்கத்தால் அதிருப்தி அடைந்து அதிமுக இப்படி நடந்து கொள்கிறதோ என்று நினைக்கவும் தோன்றுகிறது.

பாதிப்பு

“திமுகவும், அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைப்பது தேர்தலில் குறிப்பிட்ட அளவிற்கு ஓட்டுகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். அது வெற்றி வாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“விசிகவை பொறுத்தவரை சமீப காலமாக திமுகவுடன் இணக்கமாக செயல்படுவது போல தெரியவில்லை. சற்று ஒதுங்கியே நிற்கிறது. அதற்கு காரணம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவத்தில் இதுவரை திமுக அரசு யாரையும் கைது செய்யவில்லை என்ற விரக்தியாக இருக்கலாம். அல்லது சேலம் மாவட்டம் திருமலைகிரியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட விடாமல் பட்டியலின மக்களை திமுகவின் ஒன்றிய செயலாளர் ஒருவரே ஆபாசமாக பேசி விரட்டி அடித்த காட்சி விசிக தலைவர் திருமாவளவனின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தி இருக்கலாம்.

சமூக நீதியின் ஒரே பாதுகாவலன் என்று தங்களை மார் தட்டிக் கொள்ளும் திமுகவின் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு இப்படி அநீதி இழைக்கப்படுகிறதே என்ற வேதனையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினருடன் இணைந்து விசிகவினர் பணியாற்றாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

EPS Vs Stalin - Updatenews360

எந்த விதத்தில் பார்த்தாலும், இது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு விழக்கூடிய ஓட்டுகளில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

அதிமுகவை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது எந்த அதிருப்தியும் கிடையாது. ஆனால் டெல்லி பாஜக மேலிடம் தமிழக ஆடிட்டர் ஒருவரின் பேச்சை கேட்டுக் கொண்டு அதிமுகவில் தொண்டர்கள் ஆதரவே இல்லாத ஓ பன்னீர்செல்வத்திடம் வேட்பாளர் குறித்து சமரச பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த பின்பும் கூட ஓபிஎஸ்ஐ சமாதானப்படுத்தும் முயற்சியை டெல்லி பாஜக தொடர்ந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான பின்பே அதிமுக வேட்பாளருக்கு தனது ஆதரவை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த கசப்பான அனுபவம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டு சேகரிப்பின்போது பாஜகவின் கொடிகளை அதிமுகவினர் தவிர்த்து இருக்கலாம்.

இதுபோன்ற நிலை பாஜகவினரில் பலர் ஓட்டுப் பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு செல்ல விரும்பாத மன நிலையையே ஏற்படுத்தும். இதனால் அதிமுக வேட்பாளருக்கு கிடைக்கக்கூடிய ஓட்டுகளில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

கூட்டணி என்று வந்துவிட்டால் தேர்தல் களத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவதுதான் வெற்றியைத் தரும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 451

    0

    0