வாக்கு சேகரிப்பில் திணறும் திமுக… இழுபறியில் ஈரோடு கிழக்கு…? கணக்கில் உதைக்கும் 42 ஆயிரம் ஓட்டுகள்!!

Author: Babu Lakshmanan
11 February 2023, 5:44 pm

தீவிர பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் என்னதான் முந்திக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக ஈடுபட்டாலும், 11 அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு திமுக தொண்டர்களுடன் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டாலும் நடைமுறையில் எதிர்பாராத பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்பதே உண்மை!

EVKS - Updatenews360

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமையுடன் கூறினாலும் கூட அதையும் கடந்து வாக்காளர்களின் அடி மனதில் 21 மாத கால திமுக ஆட்சியில் தங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்ற அதிருப்தி அந்த தொகுதி மக்களிடம் புதைந்து கிடப்பதை உணர்ந்து கொள்ளவும் முடிகிறது.

சவால்

அதற்கு பல காரணங்கள் உண்டு.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் அதிகம்.

இதேபோல் ஜவுளி சார்ந்த குடோன்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தும் வருகின்றனர். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அடங்கியுள்ள வளையக்கார வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, திருநகர் காலனி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில் மேடு வீதி, மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த
11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். எலக்ட்ரானிக்ஸ், கார்மெண்ட்ஸ் கடைகளும் அதிக அளவில் வைத்துள்ளனர். இதேபோல் ஏராள மானோர் டீ கடையும் வைத்துள்ளனர். இவர்களுக்கும் இந்த தொகுதியில் வாக்குரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் இத்தொகுதியில் வசிக்கிறார்கள். இவர்களின் குடும்பங்களில் குறைந்தபட்சம் 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதுதவிர இந்த தொகுதியின் நடைபாத ஓரங்களில் காய்கறி, பழங்கள், பூ, தின் பண்டங்கள், சிறார்களுக்கான விளையாட்டு சாதனங்கள், பெண்களுக்கான பேன்சி பொருட்கள், வேட்டி, சேலை, ஆயத்த ஆடைகள் விற்பனை செய்வோர் என 700-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

இந்த மூன்று தரப்பினரின் வாக்குகளை பெறுவதுதான் திமுகவினருக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது.

மின்கட்டண உயர்வு

இதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

“தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்ட பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் கைத்தறி விசைத்தறி மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் 15 ஆயிரம் பேர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஐந்தாயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்தவர்கள் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய விழி பிதுங்கும் நிலையும் ஏற்பட்டது.

வீடுகளில் கைத்தறி தொழில் ஈடுபட்டு வந்த 1500 நெசவாளர் குடும்பங்கள் அதை இழுத்து மூடிவிட்டு வேறு வேலை வாய்ப்புகளை தேடிக் கொள்ளும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

இப்படி மின்கட்டணத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த தொகுதியில் மட்டும் 25 ஆயிரம் பேர் வரை இருக்கலாம். அவர்கள் கடந்த 6 மாதங்களில் மூன்று முறைதான் மின்கட்டணம் செலுத்தி இருப்பார்கள் என்றாலும் கூட ஒவ்வொருவர் தலையிலும் 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

இதனால் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் திமுக அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பது கண்கூடாக தெரிகிறது. அவர்களை சமாளிக்கும் விதமாகத்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணத்தை குறைப்பது பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்.

ஆனால் இதை நம்பி இங்கு நெசவு தொழிலில் ஈடுபடுவோர் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஏனென்றால் ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே திமுக அரசு அறிவித்து உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள்

அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதை நிறைவேற்றினால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் நீதிச்சுமை ஏற்படும் என்பதால் திமுக அரசு நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

இதனால் பெரும் கொந்தளிப்பில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினரும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்
12 ஆயிரம் ஓட்டுகள் வரை காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கிடைக்காமல் போகலாம்.

இதேபோல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 21 மாதங்களில் நடைபாதை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்து அன்றாட வாழ்க்கையை ஓட்டி வரும் சிறு சிறு வியாபாரிகள் மாமூல் வசூல் என்கிற அரக்கனின் பிடியில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சி ஈரோடு கிழக்கு தொகுதியிலும் அதிகம் காணப்படுகிறது என்பதுதான். இவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் பலருக்கு கட்டாய மாமூல் தருவதாக கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இந்த மாமூல் வாங்குவது திடீரென நின்றுபோய் விட்டதுதான். இதுபோன்ற சிறு சிறு வியாபாரிகளின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் 3000 ஓட்டுகள் வரை இருக்கலாம். இவர்களின் வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு கிடைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஏனென்றால் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் மாமூல் வேட்டை வழக்கம்போல் தொடரும் என்ற அச்சம்தான் இதற்கு காரணம்!

இதே தொகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 2 வீதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஒன்றை ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பல முறை அழைந்தும் திமுக அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் இப்போது ஓட்டு கேட்க மட்டும் வந்துவிட்டார்கள் என்ற மனக்குமுறல் அவர்களிடம் வெளிப்படையாகவே வெடித்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள சுமார் 1300 ஓட்டுகள் திமுக கூட்டணி வேட்பாளருக்கு கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

இப்படி ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு மொத்த ஓட்டுகளில் 42 ஆயிரம் வாக்குகள் வரை குறைவாக கிடைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது. இது தவிர வட மாநிலத்தவர்களின் 11 ஆயிரம் ஓட்டுகளும் பீதியை கிளப்புவதாக உள்ளது.

இதை களத்தில் இறங்கிய பிறகுதான் திமுகவினரும் உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த ஓட்டுகள் அப்படியே முழுமையாக அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு பக்கம் திரும்பி இரட்டை இலையில் பதிவாகி விடக்கூடாது என்ற கவலையும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வந்துவிட்டது. என்ற போதிலும் தொகுதியில் இருக்கும் மற்ற ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்களை ஓட்டுப் பதிவு முடியும் வரை தினமும் சிறப்பாக கவனிப்பதன் மூலம் ஈடுகட்டி விடலாம் என்று திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் கணக்கு போடுகின்றனர்.

திமுக பீதி

முதலில் மிக மிக எளிதாக வெற்றியை தட்டிப் பறித்து விடலாம் என்று எண்ணிய திமுகவினர் தற்போது கள எதார்த்தத்தை உணர்ந்து தவியாய் தவிக்கிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இழுபறி வெற்றி பெற்றால் கூட போதும் என்கிற மனநிலைக்கும் வந்து விட்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலினும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ வி கேஎஸ் இளங்கோவனுக்கும், அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதை தெரிந்து கொண்டுதான் வருகிற 24, 25-ம் தேதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

EPS Vs Stalin - Updatenews360

2021 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான ஒன்று. இப்போது அதற்கான கேள்வியே எழவில்லை. அதனால் சிறுபான்மை மக்களும் பழைய வேகத்துடன் ஓட்டு போட வாய்ப்பில்லை. எனவே வழக்கம் போல் அதிமுகவிற்கு ஓட்டு போடும் மனநிலை வாக்காளர்களிடம் ஏற்பட்டு விடக்கூடாது. ஒருவேளை அதிமுக வெற்றி பெற்று விட்டால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் கடைசி நேரத்தில் ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குகிறார்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எப்படி பார்த்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறப்போவது யார் இழுபறி நிலைமைதான் தென்படுகிறது!

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 558

    0

    0