சீமானின் ஒத்த பேச்சு.. மொத்தமா போச்சு… ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விரட்டியடிப்பு ; அப்படி என்ன சொன்னாரு தெரியுமா..?
Author: Babu Lakshmanan17 February 2023, 5:02 pm
ஈரோடு : வாக்கு சேகரிக்கச் சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களை ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து களத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகாவை ஆதரித்து சீமான் சாதிய அடிப்படையில் வாக்கு சேகரித்தார்.
அவர் பேசியதாவது :- முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர், எனக் கூறினார்.
மேலும், இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததாகவும், அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, ‘போடா வேற ஆளை பாரு’! என்றதாகவும், வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கியதாகவும், அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என சீமான் பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அருந்ததியர்- தெலுங்கு வந்தேறிகள் என்ற சீமானின் பேச்சு கடுமையான விவாதங்களை எழச் செய்துள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா இன்று வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எங்களை தெலுங்கு வந்தேறிகள் என ‘சீமான் சொல்வாராம்.. இவங்க எங்ககிட்ட வந்து ஓட்டு கேட்பாங்களாம்,’ எனக் கூறி ஆவேசப்பட்டனர். இதனால் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் திரும்பிச் சென்றனர்.