ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்… முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை..!!
Author: Babu Lakshmanan2 March 2023, 9:07 am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. பதிவான 392 தபால் வாக்குகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். பின்னர் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 15 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 5,629 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 1,688 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 288 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்தன் 58 வாக்குகளும் பெற்றுள்ளனர்.