கடிதம் எழுதியும் பலனில்லை : கைவிரித்த டெல்லி அரசு.. ஸ்டாலின்- கெஜ்ரிவால் உறவில் விரிசலா?…!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2022, 8:28 pm
சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரே திசையில் பயணித்து வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே தற்போது இணக்கமான நட்புறவு இல்லையோ? என்ற பரபரப்பான கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
டெல்லி பள்ளியில் தமிழக முதலமைச்சர்
ஏனென்றால் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி டெல்லி சென்ற ஸ்டாலின், அந்நகரில்
ஆம் ஆத்மி அரசு நடத்தி வரும் நவீன பள்ளி ஒன்றை பார்வையிட்டு அதில் வாரம் ஒருமுறை புத்தகமில்லா மகிழ்ச்சி வகுப்புகள் எடுக்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். இந்த நாளில் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது என்பது பற்றி அவரிடம் அப்போது விவரிக்கப்பட்டது.
இதனால் ஆச்சரியப்பட்ட ஸ்டாலின், “இன்று இந்த நவீன பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் ஒரு பள்ளியை தமிழகத்தில் விரைவில் நாங்கள் உருவாக்குவோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவுற்று அந்த பள்ளியை நாங்கள் திறக்கிற நேரத்தில் நிச்சயமாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைப்போம். அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று பூரிப்புடன் குறிப்பிட்டார்.
புதுமைப்பெண் திட்டம்
அதன்படி கடந்த மாதம் 5-ம் தேதி அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு, மாதம்தோறும் உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை, ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்கி வைத்தார். தவிர டெல்லி அரசு நடத்தும் நவீன பள்ளிகள் போல 26 பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவில் தமிழக அரசு அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.
பிரம்மித்து போன கெஜ்ரிவால்
அப்போது அவர் கூறுகையில், “புதுமைப் பெண் திட்டம் புரட்சிக்கரமான திட்டம். கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி நவீன பள்ளிகளை ஸ்டாலின் வந்து பார்த்தார். அதே மாடலில் பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென்கிற விருப்பத்தையும் சொன்னார். அப்படி அமைப்பதற்கு மூன்றாண்டு காலமாகும் என நான் நினைத்திருந்தேன். ஆனால், ஆறே மாதத்தில் இந்த நவீன பள்ளிகளை கொண்டு வந்து விட்டார் ஸ்டாலின்” என்று புகழாரமும் சூட்டினார்.
இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது ஆம் ஆத்மியின் பக்கம் திமுக சாய்ந்து விடுமோ என்ற கலக்கமும் காங்கிரசிடம் ஏற்பட்டது.
கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்
இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகைக்கு டெல்லி நகரில் பட்டாசு விற்பனை செய்ய அந்த மாநில அரசு அனுமதிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின், கெஜ்ரிவாலுக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார்.
இதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. தலைநகர் டெல்லியில் காற்று மாசுவின் அளவு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை காரணம் காட்டி தீபாவளி பட்டாசு விற்பனைக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
இரண்டு முறை கடிதம்
இதனால் விதிமுறைகளுக்கு உட்பட்ட பசுமை பட்டாசுகள் விற்பனையை அனுமதிக்கும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதிய கடிதத்தில், “படடாசு விற்பனைக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்கக் கூடாது. விதிமுறைகளுக்கு உட்பட்ட பசுமை பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என ஏற்கனவே 2021 அக்டோபர் 13ல் தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
பண்டிகை கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைதான்.
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஒளியேற்றவும்
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக் குறைந்த அளவிலே மாசு ஏற்படும்.
எனவே பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து உரிமம் பெற்ற வணிகர்கள் வழியே அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை விற்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வேறு எந்த மாநிலமும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்காத நிலையில் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை நீக்குவதன் வழியாக தமிழகத்தின் சிவகாசியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப் பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற இயலும். எனவே டெல்லியில் விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை அனுமதிக்க வேண்டுகிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
கடிதத்தை கண்டுகொள்ளாத கெஜ்ரிவால்
ஆனால் அவருடைய கடிதத்தை கெஜ்ரிவால் அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை. மாறாக ஒரு அதிரடி அறிவிப்பை டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது. அது திமுக அரசுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது.
இது தொடர்பாக அந்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்ட அறிவிப்பில், “தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் மேலும் மோசமடையும். பட்டாசு வெடிப்பதால் அதிலிருந்து வெளிவரும் புகை, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறது. எனவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு டெல்லி அரசு முழுத் தடை விதித்து இருக்கிறது. வருகிற ஜனவரி 1-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கவோ, உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது. அதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.
பட்டாசு வெடித்தால் சிறை
இந்த தடை உத்தரவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளது போலவே வருகிற தீபாவளிக்கும் பொருந்தும். தடையை மீறி டெல்லியில் யாரும் பட்டாசுகளை வாங்கினாலோ, வெடித்தாலோ 200 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறைத் தண்டனை நிச்சயம் உண்டு.
பட்டாசுகளை தயாரித்து விற்றால் 5,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த தடை உத்தரவை அமல்படுத்தி கண்காணிக்க 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பது, விற்பனை செய்வது, வெடிப்பது, தடை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
“தீபாவளியன்று பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
தற்போது சிவகாசியின் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகளும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலும் பசுமை பட்டாசுகளையே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. அப்படி இருந்தும் காற்று மாசை காரணம் காட்டி டெல்லி மாநில அரசு பட்டாசு விற்பனையை தடை செய்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல. இது பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்கச் செய்துவிடும்” என்று அரசியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசியல் காரணமா?
“டெல்லி காற்றில் மாசு ஏற்படுவதற்கு விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது 10 சதவிகிதம்தான் காரணம் என்றும் வாகன தூசு, தொழிற்சாலை, கட்டுமானப் பணி, மின்சாரம் போன்றவைதான் மிக முக்கியக் காரணங்கள் எனவும் கூறப்படும் நிலையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பசுமை பட்டாசுகள் மீது பழியைப் போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இதனால் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியான கோணத்தில் கெஜ்ரிவால் பார்க்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால் பஞ்சாப் மாநில விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதும் டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுவது உண்டு. அந்த மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. எனவே அதை திசை திருப்பும் நோக்கில் பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை, மீறினால் சிறை என டெல்லி மாநில அரசு பகிரங்கமாக மிரட்டுவது போல உள்ளது.
கோரிக்கையை நிராகரித்த கெஜ்ரிவால்
அதுமட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் போட்டிக் களத்தில் உள்ள கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டு அதற்கு அவர் மறுத்திருக்கலாம் என்ற நிலையில் பட்டாசு விவகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளாரோ? என்று கருதவும் தோன்றுகிறது. ஸ்டாலின் கடிதம் எழுதுவதற்கு முன்பாகவே இந்த முடிவை டெல்லி மாநில அரசு எடுத்து இருந்தால் இதில் எந்த சந்தேகமும் ஏற்பட்டிருக்காது.
தவிர ஸ்டாலின் இதுபோன்ற வேண்டுகோள் கடிதத்தை கடந்த ஆண்டும் கெஜ்ரிவாலுக்கு எழுதியிருக்கிறார்.
அப்படி இருந்தும் கூட தமிழக முதலமைச்சர் இரண்டாவதாக எழுதிய கடிதத்தை அவர் கண்டுகொள்ளவேயில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அதனால் கெஜ்ரிவால் வழக்கம்போல தனது இரட்டை வேடத்தை இந்த விஷயத்தில் போட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் காரணங்களை கூறுகின்றனர்.