கொளுத்தி போட்ட EVKS… கொந்தளித்த விஜயதாரணி : வெடித்தது கோஷ்டி பூசல்?
Author: Udayachandran RadhaKrishnan11 March 2023, 9:19 pm
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவி ஏற்றகொண்ட உடனேயே காங்கிரசையும் கோஷ்டி பூசலையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை உறுதி செய்வதுபோல வேடிக்கையானதொரு நிகழ்வும் நடந்தது. அதை தொடங்கி வைத்தவரும் சாட்சாத் ஈவிகேஎஸ் இளங்கோவனே தான்.
மீண்டும் வெடிக்கும் கோஷ்டி பூசல்?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டபோது தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்பட கூட்டணி கட்சிகளின் அத்தனை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கட்சியின் சட்டப்பேரவை கொறடா விஜயதாரணி உள்பட 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொறடா என்கிற முறையில் விஜயதாரணிக்காவது அழைப்பு விடுத்திருக்கலாம் என்ற முணுமுணுப்பும் கட்சிக்குள் எழுந்தது. இதுபற்றி ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவும் செய்தனர்.
மீண்டும் பதவி ஏற்பேன்
அதற்கு அவர், “சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இங்கே இருக்கிறார். அவர் தான் 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பிரதிநிதி. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியும் பங்கேற்றுள்ளார். கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத தூய தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். என்னைப் பொறுத்தவரை எங்கள் கட்சியில் இருந்து எல்லோரும் வந்து பங்கேற்றுள்ளனர்.
விஜயதாரணிக்கு தனியே அழைப்பிதழ் அனுப்பியிருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். அவரை நேரில் சந்தித்து, அதற்கான வருத்தத்தைத் தெரிவிப்பேன். ஒருவேளை அடுத்த முறை பதவியேற்றால் தனியாக முதலில் அந்த அம்மையாருக்கு அழைப்பிதழ் வைத்து பதவி ஏற்பேன்” என்று குறிப்பிட்டார்.
EVKSக்கு எதிர்ப்பு!!
வழக்கமாகவே பிடிக்காத கட்சித் தலைவர்களை நக்கலும், நையாண்டியும் செய்துபேசுவதில் ஈ வி கே எஸ் இளங்கோவன் கை தேர்ந்தவர் என்பதால் தனது கட்சியை சேர்ந்த விஜயதாரணி பற்றி கருத்து கூறியபோதும் அதே பாணியை அவர் பின்பற்றி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போதே அவருக்கு 75 வயதாகிறது. அப்படி இருக்கும்போது இன்னொரு முறை எம்எல்ஏவாக பதவியேற்கும் பட்சத்தில் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கூறி இவர் இளைய தலைமுறைக்கு வழிவிடவே மாட்டார் போலிருக்கிறது. அடுத்த சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும்போது அவருக்கு 78 வயதாகிவிடுமே என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறையினர் மனதுக்குள் புலம்பித் தீர்க்கும்படி செய்துவிட்டார் என்ற கடுமையான விமர்சனமும் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு எதிராக எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம் விஜயதாரணியை அம்மையார் என்று கூறுவதன் மூலம் அவரை கேலி செய்திருப்பதும் தெரிகிறது.
இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
இதற்கு பதிலடி கொடுத்த விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசும்போது, “பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களையும் அழைத்து இருக்கவேண்டும். அதற்காக ‘கொறடா’ என்ற அடிப்படையில் என்னிடமாவது சொல்லியிருந்தால் நான் அனைவரையும் அழைத்து இருப்பேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. அது ஏன் என்று புரியவில்லை.
இதை கேட்டால் மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு கிடைத்தால் நேரில் அழைப்பேன் என்கிறார். அப்படி ஒரு வாய்ப்பு இளங்கோவனுக்கு மீண்டும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அவர் என்னை அம்மையார் என்று அழைத்துள்ளார். ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? கொறடா மீது எந்த பயமும் தேவையில்லை. அந்த பதவி மீதான மரியாதை இருந்தாலேபோதும்” என்று ஈ வி கேஎஸ் இளங்கோவன் பாணியிலேயே அவரை ஒரு வாறு வாரி இருக்கிறார்.
EVKS – விஜயதாரணி மோதல்?
“ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அதுதான் எம்எல்ஏ பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும் வெடித்துள்ளது. அதனால் இனி சத்தியமூர்த்தி பவனில் மட்டுமின்றி தமிழக சட்டப்பேரவையிலும் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கலாம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“2015-ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார்.
அதே சமயத்தில் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக விஜயதாரணி எம்எல்ஏ பதவி வகித்தார். அப்போது, கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இளங்கோவன் கோஷ்டியில் உள்ள பெண்களுக்கும் விஜயதாரணியின் கட்டுப்பாட்டில் இருந்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.
இது தொடர்பாக இளங்கோவனுடன் விஜயதாரணி நேரடியாகவே மோதியும் இருக்கிறார். இந்த மோதலின்போது தகாத வார்த்தைகளால் கேவலமாக விமர்சித்ததுடன் கட்சியை விட்டு வெளியேறுமாறும் தன்னை இளங்கோவன் மிரட்டினார் என்பதும் அவருடைய குற்றச்சாட்டாக இருந்தது. ஒரு கட்டத்தில் இருவருமே மாறி மாறி எதிர்ப்பாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும் கொண்டனர்.
இனி அடிக்கடி பார்க்கலாம்
இவர்களின் சண்டையை டெல்லி மேலிடம் தலையிட்டு பஞ்சாயத்தும் செய்தது. என்றபோதிலும் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியவில்லை. கடைசியில் தமிழக மகளிர் காங்கிரஸ் பதவியில் இருந்து விஜயதாரணி தூக்கி எறியப்பட்டார். இதனால்
ஈ வி கே எஸ் இளங்கோவன் மீது விஜயதாரணிக்கு எப்போதுமே கடுமையான கோபம் உண்டு. அதையெல்லாம் நினைவூட்டும் விதமாகத்தான் அவரை மறைமுகமாக கிண்டல் அடித்திருக்கிறார்.
இனி இளங்கோவனும் லேசில் விடமாட்டார் என்று சொல்லலாம். ஏனென்றால் பாரம்பரியமிக்கதொரு குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் ஈ வி கே எஸ் இளங்கோவனிடம் எப்போதும் இறுமாப்பும் ஆணவமும் நிறைந்து இருக்கும் என்பார்கள். அதனால் இனி தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல்கள் அடிக்கடி நடக்கும் என்று உறுதியாக நம்பலாம்” அந்த அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகின்றனர்.