அமைதிப்பாதையில் இருந்த தமிழகம்… போதைப்பாதையில் அழைத்துச் செல்லும் திமுக அரசு ; ஓபிஎஸ் கடும் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
22 April 2024, 12:01 pm

போதைப்‌ பொருட்களின்‌ நடமாட்டம்‌ தமிழ்நாட்டில்‌ தலைவிரித்து ஆடுகிறது என்றால்‌, போதைப்‌ பொருள்‌ நடமாட்டத்தை தி.மு.க ஊக்குவிக்கிறதோ என்ற ஐயம்‌ மக்கள்‌ மனதில்‌ எழுந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தி.மு.க. ஆட்சி என்றாலே தீவிரவாதம்‌, பயங்கரவாதம்‌, வன்முறை, அராஜகம்‌ ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப்‌ பொருட்கள்‌ நடமாட்டம்‌ கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப்‌ பாதையில்‌ அழைத்துச்‌ செல்கிறது. அமைதிப்‌ பாதையில்‌, ஆக்கப்பூர்வமான பாதையில்‌, முன்னேற்றப்‌ பாதையில்‌ செல்ல வேண்டிய தமிழ்நாட்டை அழிவுப்‌ பாதையில்‌ தி.மு.க. அழைத்துச்‌ சென்று கொண்டிருக்கிறது. இதுதான்‌ திராவிட
மாடல்‌ தி.மு.க. ஆட்சியின்‌ ஒரே சாதனை.

மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா..? தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : அன்புமணி எச்சரிக்கை..!!

தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ பந்தநல்லூரில்‌ இருந்து கும்பகோணம்‌ நோக்கி அரசுப்‌ பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில்‌, பாலக்கரை பகுதியில்‌ ஆறு இளைஞர்கள்‌ கஞ்சா போதையில்‌ சாலையின்‌ நடுவே இரு சக்கர வாகனத்தில்‌ நின்று கொண்டு அவர்களுக்குள்‌ சண்டையிட்டு கொண்டிருந்ததாகவும்‌, இதனைப்‌ பார்த்த ஒட்டுநர்‌ பேருந்தினை நிறுத்திவிட்டதாகவும்‌, இதனைப்‌ பார்த்த இளைஞர்கள்‌ பேருந்தை எடுக்கச்‌ சொன்னதாகவும்‌, இதற்கு சாலையின்‌ நடுவே உள்ள இரு சக்கர வாகனத்தினை
எடுத்தால்தான்‌ பேருந்தினை எடுக்க முடியும்‌ என்று ஒட்டுநர்‌ பதில்‌ சொன்னதையடுத்து, பேருந்துக்குள்‌ ஏறிய இளைஞர்கள்‌ ஒட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும்‌, இந்தத்‌ தாக்குதலில்‌ ஒட்டுநருக்கு பலத்த காயம்‌ ஏற்பட்டுள்ளதாகவும்‌ தகவல்கள்‌ வருகின்றன.

இதனை வீடியோ எடுத்த செய்தியாளர்கள் மீதும்‌ போதையில்‌ உள்ள இளைஞர்கள்‌ தாக்குதல்‌ நடத்திய நிலையில்‌, செய்தியாளர்கள்‌ இருவரும்‌ பலத்த காயம்‌ அடைந்துள்ளனர்‌.

இதேபோன்று, சென்னை, கண்ணகி நகரில்‌ கஞ்சா போதையில்‌ காவலர்களையே தாக்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. சென்னை, கண்ணகி நகரில்‌ உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல்‌ துறையினரையே கஞ்சா வியாபாரியும்‌, அவரது நண்பர்களும்‌ தாக்கியுள்ளனர்‌. இந்தத்‌ தாக்குதலில்‌ படுகாயமடைந்த இரண்டு காவலர்கள்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.

மேற்படி இரு சம்பவங்களைப்‌ பார்க்கும்போது, தமிழ்நாட்டில்‌ சட்ட விரோதிகளின்‌ ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம்‌ அனைவர்‌ மனதிலும்‌ எழுகிறது. தமிழ்நாட்டில் போதைப்‌ பொருட்களின்‌ நடமாட்டம்‌ அதிகரித்து வருவதும்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவரும்‌, தி.மு.க. நிர்வாகியாக இருந்தவருமான திரு. ஜாபர்‌ சாதிக்‌ போதைப்‌ பொருள்‌ தடுப்புப்‌ பிரிவினரால்‌ கைது செய்யப்பட்டு இருப்பதும்‌ அனைவரும்‌ அறிந்த ஒன்று. இதற்குப்‌ பின்னும்‌, போதைப்‌ பொருட்களின்‌ நடமாட்டம்‌ தமிழ்நாட்டில்‌ தலைவிரித்து ஆடுகிறது என்றால்‌, போதைப்‌ பொருள்‌ நடமாட்டத்தை தி.மு.க,
ஊக்குவிக்கிறதோ என்ற ஐயம்‌ மக்கள்‌ மனதில்‌ எழுந்துள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள்‌ அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக்‌ கரம்‌ கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும்‌, பொறுப்பும்‌ தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச்‌ செய்யாமல்‌ இருப்பது, எதிர்கால இந்தியாவின்‌ தூண்களாக விளங்கும்‌ இளைஞர்களின்‌ வாழ்க்கையுடன்‌ விளையாடுவதற்குச்‌ சமம்‌. இது சட்டம்‌-ஒழுங்கையும்‌, நாட்டின்‌ வளர்ச்சியையும்‌ நாசமாக்கும்‌ செயல்‌, தி.மு.க. அரசின்‌ இந்தச்‌ செயல்‌ கடும்‌ கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு இளைஞர்களின்‌ எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம்‌ தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால்‌, தமிழ்நாடு முழுவதும்‌ ஆங்காங்கே அரசு சார்பில்‌ குழுக்களை அமைத்து, போதைப்‌ பொருள்‌ நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில்‌ கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களை வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!