ஓபிஎஸ்சை விடாது துரத்தும் கருப்பு…? சுயேச்சையாக களம் இறங்கும் ரகசியம்…? சவாலாக குவியும் ஓபிஎஸ்கள்!

Author: Babu Lakshmanan
26 March 2024, 9:19 pm

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவை கைப்பற்றுவதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு என்னதான் சட்டப் போராட்டம் நடத்தினாலும் இதுவரை அவருக்கு சாதகமாக எதுவுமே அமையவில்லை.

மோடியின் தீவிர ஆதரவாளரான ஓபிஎஸ், ஆறு மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த உடனேயே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன்தான் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று முதல் நபராக துண்டு போட்டார்.

இதற்காக டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். எங்களுக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 14 தொகுதிகளில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. இங்கு எங்களது வலிமையை காட்டுவோம் என்று சபதமும் எடுத்தார். ஆனால் மார்ச் முதல் வாரம் வரை டெல்லி பாஜக மேலிடம் ஓ பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் கண்டுகொள்ளவே இல்லை. இதன் பின்னர்தான் தங்களது கூட்டணியில் இருவரையும் சேர்த்துக் கொண்டனர்.

அதுவும் கடைசி நேரத்தில் டாக்டர் ராமதாசின் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்து பத்து தொகுதிகளை பெற்றுக்கொண்ட பின்பு குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது ஓபிஎஸ் அணியும், அமமுகவும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் டிடிவி தினகரன் தனது கட்சி போட்டியிட விரும்பும் 22 தொகுதிகளை குறிப்பிட்டு அதில் 11 இடங்களையாவது ஒதுக்குங்கள் என்று தமிழக பாஜகவை கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்தது என்னவோ இரண்டே இரண்டு இடங்கள்தான்.

அதேநேரம் ஆடிட்டர் ஒருவரின் சொல்படி 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பிரதமர் மோடியின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஒரேயொரு தொகுதியைத்தான் பாஜக ஒதுக்கியது. முதல் நபராக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தும் கூட அவர் கடைசி வரை போராடிய இரண்டு தொகுதிகள் கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில்தான் டிடிவி தினகரனுக்காக தேனியை விட்டுக் கொடுத்த ஓபிஎஸ் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கி இருக்கிறார். இதனால் அவருடைய மகன் ரவீந்திரநாத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்கிற ஆசையும் நிராசை ஆகிப்போனது.

சுயேச்சையாக போட்டியிடுவதால் வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கையும் வைத்து இருக்கிறார்.

தான் சார்ந்த சமுதாய மக்கள் ராமநாதபுரம் தொகுதியில் அதிகமாக வசிப்பதால் அந்த ஓட்டுகளை அப்படியே அறுவடை செய்து வெற்றி பெற்று விட முடியும் என்று அவர் கணக்கு போடுகிறார். ஆனால் அதிமுக சார்பில் அந்த தொகுதியை சேர்ந்த ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இதனால் இதுவரை, தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரட்டை இலைக்கு எதிராக முதல் முறையாக களம் காண வேண்டிய நெருக்கடியும் ஓபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ளது.

தவிர தொகுதியில் உள்ள 30 சதவீத முஸ்லிம் வாக்காளர்களை நம்பி திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்பி நவாஸ்கானையும் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டும் ஓபிஎஸ்க்கு இருக்கிறது.

ஏற்கனவே அவருக்கு இப்படி ஏகப்பட்ட தலைவலிகள் உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் மேலும் 4 ஓபிஎஸ் வடிவத்தில் அவருக்கு இடியாப்ப சிக்கல் முளைத்துள்ளது.

காரணம் முதலில் 25ம் தேதி அன்று இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட ஓபிஎஸ் மனுதாக்கல் செய்த சிறிது நேர்த்திலேயே மற்றொரு ஓ.பன்னீர்செல்வமும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகன்தான் இந்த ஓ.பன்னீர்செல்வம். திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் சட்டப் பேரவை தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் இவரை முன்மொழிந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் ஓ பன்னீர்செல்வம் அலை இன்றும் ஓயவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் தெற்குக்காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகனான பன்னீர்செல்வமும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலும் இரண்டு ஓ பன்னீர்செல்வம்களும் ராமநாதபுரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளனர்.

மனு தாக்கலுக்கு இறுதி நாளான மார்ச் 27ம் தேதி அன்று இன்னும் எத்தனை ஓ. பன்னீர்செல்வம்கள் கிளம்பப் போகிறார்களோ? என்ற திக் திக் எதிர்பார்ப்பையும் இது ஏற்படுத்திவிட்டு இருக்கிறது.

ஏணி சின்னத்தில் நிற்கும் நவாஸ் கனியையும், இரட்டை இலையில் போட்டியிடும் ஜெயபெருமாளையும் தோற்கடிக்க சுயேச்சை சின்னத்தில் நிற்கும் ஓபிஎஸ்சின் பெயரிலேயே மேலும் சில சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதால் ஓபிஎஸ் அதிர்ந்து போய் இருக்கிறார் என்பதே உண்மை.

ஏனென்றால் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 சுயேச்சைகள் நிற்பதால் தங்களுக்கு கிடைக்கும் கணிசமான வாக்குகள் சிதறக்கூடும் என ஓபிஎஸ் தரப்பு ஆழ்ந்த கவலையில் உள்ளது. அதுவும் இந்த அத்தனை ஓ பன்னீர்செல்வம் பெயர்களும் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் அருகருகே இருந்து விட்டால் சொல்ல வேண்டியதே இல்லை. அதனால் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே மேக்கிழார் பட்டி, தெற்கு காட்டூர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற பன்னீர் செல்வங்களை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது நடக்காமல் போனால் ஓபிஎஸ்க்கு தலைவலிதான்.

“முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவது அவருக்கு பலன் அளிக்குமா, என்பது சந்தேகம்தான்”
என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“பாஜக தலைமை தாமரை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று ஓபிஎஸ்சை தொடர்ந்து வலியுறுத்தியதற்கு உண்மையிலேயே வேறொரு முக்கிய காரணம் உண்டு. ஏனென்றால் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று சில மாதங்களுக்கு முன்புவரை தமிழக பாஜகவினர் கூறி வந்தனர்.

அதற்காக தீவிரமாக தேர்தல் பணிகளையும் மேற்கொண்டனர். இதனால் தமிழகத்தில் மற்ற நாடாளுமன்ற தொகுதிகளை விட ராமநாதபுரத்தில் அடிப்படை கட்டமைகளையும் அவர்கள் ஏற்படுத்தினர். ஆனால் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இதனால் தாங்கள் எடுத்து வந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் ஓபிஎஸ்ஐ ராமநாதபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி பாஜக வலியுறுத்தியது. ஆனால் ஓ பன்னீர்செல்வமோ அதை ஏற்கவில்லை. மாறாக சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

சரி, திடீரென்று நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் குதிப்பதற்கு என்ன காரணம்?…
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்கிற முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அருகில் கடந்த பிப்ரவரி மாதம்14ம் தேதிக்கு முன்பு வரை ஓபிஎஸ் அமர்ந்திருந்தார்.

ஆனால் அதிமுக தரப்பில் தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு திடீரென்று ஓ பன்னீர்செல்வத்துக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கினார். அதன் பிறகு ஓபிஎஸ் சட்டப்பேரவைக்கு செல்லவே இல்லை. இனியும் அவர் செல்வாரா என்பதும் சந்தேகம்தான்.

அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகிவிட்டால்
மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமையும் பட்சத்தில் கேபினட் அந்தஸ்தில் ஒரு அமைச்சர் பதவியை பெற்றுவிட்டு அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை உண்டு, இல்லை என ஒரு வழி பண்ணி விடலாம் என்று ஓபிஎஸ் திட்டமிடுவதாக தெரிகிறது.

அப்போது டிடிவி தினகரனுடன் இணைந்து அதிமுகவை எளிதில் கைப்பற்றி விடலாம் என்பதும் அவருடைய லட்சியக் கனவாக இருக்கிறது.

அதனால்தான் 2022 ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் தன் மீது தண்ணீர் பாட்டில் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார். ஆனால் அதற்குப் பழிக்கு பழிதீர்க்க அதே ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி அதிமுக தொண்டர்களிடம் காலமெல்லாம் தீராத பகைமையையும் அவர் சம்பாதித்துக் கொண்டார்.

அதேபோல 2017 பிப்ரவரி மாதம் தன்னிடமிருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் இரவு நேரத்தில் தர்மயுத்தம் நடத்தியவர்தான்,
ஓ பன்னீர்செல்வம்.

பின் நாட்களில் டிடிவி தினகரன் தன்னுடன் 18 எம்எல்ஏக்களை சேர்த்துக்கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக 2019 மே மாதம் வரை எல்லாவிதமான தில்லாலங்கடி வேலைகளையும் பார்த்தவர் என்பதை அதிமுக தொண்டர்கள் அனைவருமே நன்கு அறிவர். இதை அவர்கள் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.

26 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிய செலாவணி விதிகளை மீறி லண்டன் நகரில் 150 கோடி ரூபாய்க்கு ஹோட்டல் தொடங்கிய வழக்கில் அமலாக்கத்துறை விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை கட்ட முடியாமல் இன்று வரை டிமிக்கி கொடுத்து வரும் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்து இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

அவர்கள் இருவரும், யாருக்கும் அடிபணியாமல் அதிமுகவை வழி நடத்தி வரும்
எடப்பாடி பழனிசாமிடம் இருந்து மீட்போம் என்று கூறுவதும் நல்ல நகைச்சுவை.

இந்தநிலையில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுவது அவருக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தவிர அவருடைய பெயரிலேயே பல சுயேச்சைகள் போட்டியிடுவது அவருக்கு பாதகமாகவே அமையும்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 246

    0

    0