ஆட்சியாளர்களின் தவறான வழிகாட்டுதலை ஏற்கக் கூடாது ; முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பரபர பேச்சு.!!
Author: Babu Lakshmanan15 October 2022, 11:32 am
திருவாரூர் ; ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு செயல்படுவது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழக ஓய்வு பெற்ற டிஜிபி பொன்மாணிக்கவேல் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் சிவனடியார்களுடன் சேர்ந்து உழவாரப்பணி மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் காப்பகங்களில் 5090 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 813 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 193 சிலைகள் போலியானவை. அதாவது ஐம்பொன் சிலைகளை மாற்றி விட்டு, உலகச் சிலைகளை வைத்துள்ளனர். இந்த சிலைகளை மாற்றி வைத்தது, ஒரு மனிதன் தான் மாற்றி வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் அது குற்றமாகும்.
இந்த குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடைபெற்று இருக்க வேண்டும். இதில், எந்த ஒரு ஆட்சியாளர்களுக்கும் பொறுப்பு அல்ல. அதே நேரத்தில், அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு செயல்படுவது தவறு. எனவே, மாயமான சிலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்தால் உண்மை வெளிப்படும்.
கோயில்களுக்கு சேர சோழர் பாண்டியர் மன்னர் காலத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் கொடுக்கப்பட்டு அதிலிருந்து தான் இன்றளவும் ஊழியங்கள் வழங்கப்படுகின்றன. எனவே, இதில் நடைபெறும் தவறுகளை கண்டறிய புலன் விசாரணை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரண மனிதன். என்னை முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளிவருவதால் சர்ச்சை எழுகிறது. இதில் அரசு புலன் விசாரணை செய்தால் உண்மைகள் வெளிப்படும், என தெரிவித்தார்.