‘உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆகனும்’… அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..!!
Author: Babu Lakshmanan17 July 2023, 10:13 am
சென்னை ; அமைச்சர் பொன்முடி வீட்டில்சோதனை நடத்தப்பட்டு வருவது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர் பொன்முடி. சென்னைசைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை குறித்த தகவல் அறிந்து வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருவதால், சோதனை நடக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையின் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில், திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். அமலாக்கத்துறையின் சோதனை இறுதியிலே முழு விவரம் தெரியவரும். பெங்களூரு எதிர்க்கட்சி கூட்டத்திற்கும், அமலாக்கத்துறை சோதனைக்கும் சம்பந்தம் இல்லை” என்று கூறினார்.