அடுத்த 9 மாதங்கள் தான்… அதிமுகவுக்கு எகிறப் போகும் மவுசு ; திமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் சொன்ன தகவல்..!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 3:51 pm

தமிழகத்தில் எங்கு பார்தாலும் கொலை நடக்கிறது, சாதாரண மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தால் எந்த பலனும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்ததாகவும், தற்போது அமளி பூங்காவாக உள்ளதாக கூறினார். தமிழகத்தில், பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ள நிலையில் சாதாரண குடிமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம் அப்பகுதியில் உள்ள ராமதாஸ் நகர் மக்களுக்காக தான் கட்டப்பட்டதாகவும், அவர்களுக்கு அந்த வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

செந்தில்பாலாஜியை பாதுகாக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்ந்தாது. எடப்பாடி தான் முடிவு செய்வார்

திமுக கூட்டணியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அடுத்த 9 மாதங்களில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். தோற்பவர்களுடன் பயணிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் திமுக அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வர வாய்புள்ளது என கூறினார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!