கண்ணீர் வராமலே நடிக்கும் அமைச்சர் உதயநிதி… பிரதமரை சந்தித்த போது நீட் குறித்து பேசாதது ஏன்..? ஜெயக்குமார் கேள்வி..!!
Author: Babu Lakshmanan22 ஆகஸ்ட் 2023, 7:20 மணி
இரண்டரை ஆண்டு காலம் நீட் தேர்வு விலக்கு பெற இவர்கள் செய்தது என்ன கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தற்போது நான் நாடாளுமன்ற தேர்தலுக்காக நீட் தேர்வு ரத்து என நாடகம் ஆடி வருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தராத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டும் அலட்சியமாக செயல்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபியுடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- மதுரை நடைபெற்ற அதிமுக மாநாட்டில் சுமார் 20 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். அதிமுக மாநாட்டின் கூட்டத்தை கண்டு பொறுக்க முடியாத திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மாநாட்டிற்கு ஆர்டிஓ மூலம் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தார்.
மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படும் என நீதிமன்றத்தில் காவல்துறை கூறியபடி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், பெயரளவுக்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டது. போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படவில்லை. எனவே நீதிமன்றத்தில் கூறியபடி சரிவர செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். டிஜிபி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் மூலமாக காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் ஏவல் துறையாக இருக்கிறது. திமுகவினராக காவல்துறைக்கு ஊதியம் வழங்குகிறார்கள்..? முதலமைச்சர் ஸ்டாலின் பெரிய நடிகர். தினம் ஒரு போட்டோ சூட் நடத்தி வரும் அவர் வழியில் அவரது மகனான உதயநிதி ஸ்டாலினும் நடித்து வருகிறார். உண்ணாவிரத போராட்டத்திற்கு போகும் போது அவர் கிளிசரின் எடுத்து போக மறந்து விட்டதால், கண்ணீர் வராமலே கண்ணீர் வந்தது போல், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மூலம் நீட் தேர்வு ரத்து செய்வோம் என திமுக நாடகம் ஆடுகிறது. இது தேர்தலுக்கான நாடகம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஆட்சி பொறுப்பேற்று விட்டு இரண்டரை ஆண்டு காலம் ஒன்றும் செய்யாமல், தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும், தமிழக நலன் மற்றும் உரிமைகளை நடத்திக் கொடுக்காமல் பெற்று தந்தோம்.
பிரதமர் வீட்டிற்கு முன் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து பேசும் போது நீட் விலக்கு தொடர்பாக பேசாதது ஏன். திமுகவே ஒரு புளுகு மூட்டை அவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஏன் பிரதமர் வீட்டுக்கு செல்ல வேண்டும். நீட்டிற்கு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்த போது திமுகவும் சேர்ந்து தான் அதற்கு விதை போட்டது.
நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர்களை சந்தித்துள்ள நிலையில், அவர் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஏற்கனவே அவர் வர மாட்டேன் என கூறியுள்ளார். எனவே, அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவரது செயல்பாடு குறித்து கருத்து தெரிவிப்பேன். பூனைக்குட்டி வெளியே வரட்டும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்
நீட் தேர்விற்கு விலக்கு வாங்கி கொடுக்க முடியாதவர்கள் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும். ஆட்சியிலிருந்து விலகி போங்கள். கச்சதீவை கோட்டை விட்ட கட்சி திமுக. பணம் ஒன்று தான் அவர்களின் குறிக்கோள். தமிழக உரிமை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை, எனவும் தெரிவித்தார்.
0
0