‘அசிங்கமா இல்லையா’… உங்க அப்பா சமாதியில அமர்ந்து கேளுங்க… கனிமொழிக்கு ஜெயக்குமார் பதிலடி!!
Author: Babu Lakshmanan18 February 2023, 5:08 pm
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலனின் 164வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக அரசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருப்பதாகவும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது எனவும், அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி எனவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை, என்றார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் அத்துமீறல்கள், அநியாயங்கள் பண்ணாலும் அதையும் தாண்டி அதிமுக வெற்றி பெறுவது உறுதி, என்றார்.
முன்னதாக சிந்தனை சிற்பி சிங்காரவேலன் சிலைக்கு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீரசாமி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தவல்லி ஆகியோர் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சிந்தனை சிற்பி சிங்கார வேலருக்கு மரியாதை செலுத்தினர்.