பெண்கள் ஓசி பேருந்தில் பயணம் எனப் பேசிய விவகாரம்… அமைச்சர் பொன்முடியின் அப்பா வீட்டு காசா..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Author: Babu Lakshmanan
26 September 2022, 2:25 pm

சென்னை : ஆந்திரப் படத்தில் வரும் அமைச்சர்களைப் போல் திமுக அமைச்சர்கள் உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதே போல் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகளை பாரவையிட்டார்

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செஙகல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தேன். சென்னையில் இருந்து மாற்றுக் கட்சிகளிலிருந்து அதிமுகவில் சிலர் தங்களை இணைத்துக் கொண்டனர், எனக் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது, திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை கண்டித்தும், தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை கண்டித்து எடப்பாடியார் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மிக எழுச்சியாக நடைபெற்றதாக கூறிய அவர், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

பெண்கள் ஓ.சி யில் பேருந்தில் பயணம் செய்கின்றனர் என அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், திமுக அமைச்சர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல நினைத்துக் கொள்வதாகவும், அவர்கள் ஜமீன்கள், குறுநில மன்னர்களைப் நினைத்துக் கொள்வதாக விமர்சனம் செய்தார்.

மேலும், பதவி வந்ததும் அமைச்சர்களின் தோரணை மாறி உள்ளதாகவும், ஆந்திரப் படத்தில் வரும் அமைச்சர்களைப் போல் திமுக அமைச்சர்கள் உள்ளதாகவும், பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியது பெண் இனத்தையே அவமானப்படுத்தும் செயல் என கூறிய அவர், அரசாங்க பணத்தில் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்வதாகவும், பொன்முடியின் அப்பா வீட்டு காசில்தான் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.

பல்கலைக்கழக ஆசிரியரிடம் எப்படி முகத்தை காட்டினார் பொன்முடி என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறிய அவர், திமுக அமைச்சர்களின் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்று கருத்து தெரிவித்த அவர் திமுக அமைச்சர்கள் பெண்களை இழிவுப்படுத்துவது, பட்டியல் இன மக்களை இழிவு படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்கள், வரும் தேர்தலில் இதன் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கும் என கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதாகவும், திமுக ஆட்சியில் டிசம்பர் 6 என்றால் இஸ்லாமியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று கூறிய அவர், ஜாதி மத கலவரங்கள் இல்லாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே அரசு அதிமுக என்று புகழ்ந்து பேசினார்.

தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இந்த அரசை பார்த்து பயம் இல்லை என விமர்சனம் செய்த ஜெயக்குமார், திராணி, திறன் இல்லாத அரசாக திமுக விளங்குவதாகவும், வெடிகுண்டு, கத்தி, கஞ்சா மற்றும் சூதாட்ட கலாச்சாரங்கள் திமுக ஆட்சியில் இன்றைக்கு நடைபெற்று வருவதாகவும் கூறினார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் பள்ளம் தோண்டி உள்ளனர், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்று கூறிய ஜெயக்குமார், திமுக தோண்டிய பள்ளமே இவர்களுக்கு எமனாக மாறும், வடகிழக்குப் பருவமழை வரும் பொழுது இவர்களின் ஆட்சியின் லட்சணத்தை பார்ப்போம் என்றும் கிண்டல் அடித்தார்.

தமிழகத்தில் எவ்ளோ பிரிச்சனைகள் உள்ளது, அதில் கவனம் செலுத்தாமல் மனுதர்மம் போன்ற விஷயங்களை பற்றி பேசி மக்களை திசை திருப்புவதாகவும், மின்சார விலையேற்றத்தால் யாரும் பாதிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருப்பது மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று கூறினார்.

மேலும், ஆ.ராசா சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, இந்தியாவில் மனுஸ்மிருதி ஆட்சியா நடக்கிறது? சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறது. மக்கள் விலைவாசி உயர்வால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள், விவாதிக்க வேண்டிய பிரச்சனை நிறைய இருக்கும் போது தேவையற்ற சர்ச்சை கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுப்படுகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பார். நேர்மையான, விருப்பு வெறுப்பற்ற அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார் என்றால், ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 499

    0

    0