பொங்கலுக்கு ரூ.1,000 எதுக்கு கொடுக்கறாங்க தெரியுமா..? திமுகவின் திட்டமே இதுதான் ; ஜெயக்குமார் சொன்ன ரகசியம்!!

Author: Babu Lakshmanan
24 December 2022, 1:46 pm

சென்னை: எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். பின்னர், உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது:- அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது.

அதிமுகவில் இன்று எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்று எழுச்சியாக போய்க் கொண்டிருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அது எள்ளி நகையாடக் கூடிய கருத்தாகத்தான் இருக்க முடியும்.

அதிமுகவில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களைத்தான் மற்றவர்கள் பெற முடியும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம்.

திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும், ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம் என்றனர். இப்போது ஏன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ரூ.1000 கொடுக்கிறார்கள், எனக் கூறினார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…