ரகசியம் வெளிவந்து விடும் என பயமா..? எங்கிருந்தாலும் வாழ்க என சொன்ன அண்ணாமலைக்கு திடீர் பதற்றம் ஏன்..? கடம்பூர் ராஜூ கேள்வி!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 6:53 pm

தூத்துக்குடி ; அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அண்ணாமலைக்கு கானல் நீராக தான் முடியும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் ? பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அவரது செயல்பாடு விந்தையாகவும், வேடிக்கையாக உள்ளது. அண்ணாமலை பிடிக்கவில்லை என்று அக்கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் வெளிப்படையாக கூறி கட்சியை விட்டு சென்றுள்ளனர். ஒரு கட்சியிலிருந்து விலகுவது, சேர்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்றும், அதிமுகவிலிருந்து சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

வேறு கட்சியில் இணைவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோன்றுதான் பாஜக ஐ.டி விங் தலைவர் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அவரை சேர்க்கவில்லை என்றால் அவர் திமுகவில் போய் சேர்ந்திருந்தால் அண்ணாமலை என்ன செய்திருப்பார். எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியவர் அண்ணாமலை, இன்று திடீரென பதற்றம் அடைய வேண்டிய சூழ்நிலை என்ன ? இருவருக்கும் இடையே உள்ள ரகசியம் வெளிவந்து விடும் என்ற பதட்டமா.?

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை எதிர்வினை ஆற்ற வேண்டிய இடம் திமுக தான். திமுக தலைவர் முதல் முக ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளில் பாஜகவுக்கு எதிராக உள்ள மற்ற மாநில தலைவர்கள் அழைத்து கூட்டம் நடத்தி உள்ளார். யார் பிரதமராக வரக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இதற்கெல்லாம் அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றியுள்ளார். திமுக தான் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள். இதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்றி அதன் தடுக்க முடிந்தது.

வாய் சொல்லில் வீரர் என்று பாரதியார் சொன்னது போல மீடியாவில் மட்டும் பேசினால் கட்சியை வளர்க்க முடியாது. அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அவருக்கு கானல் நீராக தான் முடியும். தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது. கூட்டணியை முடிவு செய்வது அண்ணாமலை கிடையாது. எந்த முடிவையும் டெல்லியில் தான் எடுக்க முடியும். யாருடன் கூட்டணி சேர்ந்தால் நாம் கரை சேருவோம் என்று பாஜக தலைமைக்கு தெரியும்.

அண்ணாமலைக்கு எதற்கு இந்த பதற்றம் பயம் என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். கோவில்பட்டியில் சிலர் அரைவேக்காட்டுத்தனமான செயலை செய்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜகவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் கருத்தை அண்ணாமலை தான் முதலில் தெரிவித்து இருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்கிறாரா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அண்ணாமலை அரசியலில் இன்னும் பக்குவப்படவில்லை என்று அர்த்தம், என்றார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ