வரலாற்றை திரித்துக் கூறும் பாஜக… நாடாளுமன்றத்தில் செங்கோல்… மகிழ்ச்சிகரமான விஷயம் ; ப.சிதம்பரம் கருத்து..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 4:23 pm

நாடாளுமன்றத்தில் செங்கோல் தற்போது இருப்பது மகிழ்ச்சிகரமானதாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளுக்கு மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒதுக்கியுள்ளார். இந்தப் பணிகளை இறுதி செய்வதற்காக பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தி பணிகள் குறித்து இறுதி முடிவு எடுத்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:- பாராளுமன்ற உறுப்பினர் நிதியை அதிகரிக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு நிதியை குறைக்காமல் இருந்தால் போதும். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களே என்னிடம் நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் இரண்டு வருட காலம் பாராளுமன்ற நிதியை நிறுத்தியதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியாமல் தவித்தனர்.

கொரோனா காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை நிறுத்தினால் கொரோனா கட்டுக்குள் வந்துவிடுமா என்று நாங்கள் கேட்டோம். ஆனால் அதற்கு பதில் இல்லை. கொரோனாவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்தனர்.

நேருவுக்கு கொடுத்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. வாக்கிங் ஸ்டிக்காக இல்லை. நேருவிற்கு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி என்பது மவுன் பேட்டன் பிரபு இந்தியாவிலேயே இல்லை. பாகிஸ்தானில் இருந்தார். வரலாற்றை ஆளுனரும் பாஜகவினரும் திரித்துக் கூறுகின்றனர். நடக்காததை நடந்தது போல் கூறுகின்றனர்.

1947 ஆம் ஆண்டு நடந்த வரலாறு பழைய வரலாறு. மோடி அரசை பொறுத்தவரை சுதந்திரம் கிடைத்தது மோடியால் தான் என்று கூறுவார்கள். அதற்கு முன்பு சுதந்திரமே இல்லை என்று கூறுவார்கள். நேருவிற்கு நினைவு பரிசாக தரப்பட்ட செங்கோல் தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளது மகிழ்ச்சி தான்.

மணிப்பூர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் தாமதமாக தற்போது சென்றுள்ளார். இது மகிழ்ச்சி. ஆனால் பிரதமர் மணிப்பூர் மாநில பிரச்சனையை குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்..?. பிரதமர் அந்த பகுதி மக்களிடம் வன்முறையில் ஈடுபட வேண்டாம். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறி இருக்க வேண்டும்.

மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விளையாட்டு துறை அமைச்சரோ அல்லது முக்கிய அமைச்சர்களோ சென்று அவர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி இருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்வது கண்டனத்துக்குரியது. போராட்டம் நடத்துவதற்கும், தர்ணா செய்வதற்கும் உரிமை உள்ளது. தர்ணாவை முடித்து வைப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

அனைத்து பாராளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு புதிய பாராளுமன்றம் திறப்பதற்கான அழைப்புகள் அனுப்பும்போது, குடியரசுத் தலைவருக்கு ஏன் அழைப்புகள் அனுப்பவில்லை. அதனால்தான், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விழாவை புறக்கணித்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்றது முதலீடுகளை ஈர்த்து வருவதற்காகத்தான். சர்ச்சைகளை பொருட்படுத்த வேண்டாம். அதிமுக ஆட்சியில் நடத்திய தொழில் முனைவோர் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் வந்தது என்பது குறித்து தெளிவுபடுத்தி விட்டு, தற்போது முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ள வெளிநாட்டு பயணம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஏற்கனவே தமிழக முதல்வர் கடந்த சில நாட்களில் வெளிநாடு பயணம் செய்து எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளார். விமர்சனங்களை பொருட்படுத்த தேவையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. கள்ளச் சாராய மரணங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக தான் உள்ளது. இருப்பினும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்

தற்போது பெரும் பகுதியான சோதனைகள் ஜோடிக்கப்பட்ட சோதனைகளாகவே உள்ளது. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். சோதனை முடிய வேண்டும். தமிழகத்தில் மணல் கொள்ளை பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.
ஊடகங்கள் மணல் கொள்ளைகளை அம்பலப்படுத்த வேண்டும்.

அதை தடுக்க முயற்சி செய்யும் அதிகாரிகளை தாக்குவது கடும் கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் தண்டனையை பெற்று தர வேண்டும், எனக் கூறினார்.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 344

    0

    0