2024 தேர்தலில் திமுக Vs பாஜக தான்… நாங்க ரொம்ப தெளிவாக இருக்கோம் ; மக்கள் முடிவு எடுப்பாங்க ; பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி!!
Author: Babu Lakshmanan5 October 2023, 4:54 pm
கூட்டணியில் யார் இருந்தாலும் சந்தோஷப்பட போவதில்லை, யார் போனாலும் வருத்தப்பட போவதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மஹாலில் பா.ஜ.க. மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் 66 பேரும், மாநில நிர்வாகிகள் 65 பேரும், மாநில அணி பிரிவு 38 பேரும், மாவட்ட பார்வையாளர்கள் 41 பேரும் என மொத்தம் 221 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு அண்ணாமலை வர தாமதமான நிலையில், கேசவ விநாயகம் , எச்.ராஜா உள்ளிட்டோர் நீண்ட நேரமாக மேடையிலேயே அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடலை பாடி கூட்டத்தை தொடங்கினர்.
கூட்டம் நடைபெறுவதை தொடர்ந்து, முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார்”
தொடர்ந்து, மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பேசியதாக வெளிவந்த தகவலானது :- அடுத்த 7 மாத காலத்திற்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது மத்திய அரசுத் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும். அடுத்த 7 மாத காலம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள்.
ஒவ்வொரு சட்டமன்றத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் அதாவது கீ ஓட்டர்ஸ் பட்டியலை தயாரிக்க உத்தரவு. அரசு நடத்தும் கிராம சபை கூட்டம் போல பாஜக சார்பில் வரும் 15 ஆம் தேதி ஒவ்வொரு கிளைகள் தோறும் “கூடுவோம் கூட்டுவோம்” எனும் கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்சனைகளை கையில் எடுப்போம். கூட்டணி முடிவை டெல்லி தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன். இனி முடிவு தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும், என பேசியதாக தெரிய வருகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னென்ன விசியங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசப்பட்டது. மாநில தலைவர் நிகழ்ச்சியில் வழிகாட்டி உள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிகரமாக அடி எடுத்து வைக்க வேண்டும். மூன்றாவது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்க வேண்டும். வரும் 7 மாதங்களும் என்னென்ன விஷயங்கள் ஈடுபட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலை சந்திக்க பாஜகவின் அனைத்து சகோதர சகோதரிகளும் முழு ஈடுபாட்டுடன் களமிறங்கி பணிபுரிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே உள்ளது. அதன் அடிப்படையில் என்னென்ன விஷயங்கள் நாம் கடைபிடிக்க வேண்டும். பாஜகவை பொருத்தவரை பாராளுமன்ற தேர்தல் 2024 இல் வருகிறது. 5 மாநில தேர்தல் வருகிறது அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், இப்போது இந்த தேர்தல் குறித்து முழு கவனம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது, எனக் கூறினார்.
விபி துரைசாமி தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, அவர் அவருடைய கருத்தாக ஏதாவது தெரிவித்து இருக்கலாம், அது கூட்டத்தின் கருத்தாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் கருத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள முடியாது.
யாருக்கு பின்னடைவு முன்னடைவு என்ற விவாதத்திற்குள் வரவில்லை. நாங்கள் எங்களை வலிமைபடுத்த செயல்பட்டு வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியை எப்படி பலம் பொருந்தி எப்படி வெற்றி அடைவது என்று தான் செயல்பட்டு வருகிறோம். கூட்டணி டீ குடிப்பது போன்று பேசிவிட்டு போவது கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் எல்லாம் உள்ளார்கள் என்று கட்சி பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நல்ல கூட்டணி உருவாகி அது தமிழ்நாட்டில் நல்ல வெற்றி பெற வேண்டும், எனக் கூறினார்.
அண்ணாதுரை தொடர்பாக மாநில தலைவர் பேசியது தவறு என்று அதிமுகவினர் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு,
ஏற்கனவே மாநில தலைவர் தெளிவாக சொல்லி உள்ளார். அவர் விமர்சனம் செய்யவில்லை அன்று நடந்ததை சொன்னார், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற மரியாதை அனைவருக்கும் உண்டு, என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை மரியாதை இன்றி மாநில தலைவர் பேசுவது குறித்த கேள்விக்கு, எங்கள் மாநிலத் தலைவருக்கான மரியாதையை கொடுத்து முறைப்படி அவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தரக்கூடிய மரியாதையே பாஜக மாநில தலைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றார்.
பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- கட்சியை எப்படி பலப்படுத்த வேண்டும் 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. இது கட்சி தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டியது.
மிக பெரிய அளவில் பாராளுமன்ற உறுப்பினர்களை இங்கிருந்து அனுப்பி வைப்போம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனதா ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்தி, 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்கும். 2024 தேர்தலில் வெற்றி பெறுபவர்களையும் வாக்கு சதவீதத்தையும் பார்க்கலாம். கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை. என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவது.
2024 தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி , மற்ற கட்சிகளுக்கு சக்தி இல்லை. அந்தந்த கட்சிகள் அந்தந்த கட்சியின் வளர்ச்சியை தான் பார்க்கும். பாரதிய ஜனதா கட்சி அதன் வளர்ச்சியை பார்க்கும். கூட்டணியில் யார் இருந்தாலும் போனாலும் வருத்தப்பட போவதில்லை. பாரதிய ஜனதா கட்சி வலுப்பட வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக உள்ளது.
2024 தேர்தல் பாரத பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கான தேர்தல். 39க்கு 39 பாரத பிரதமரிடம் வரும். குற்றச்சாட்டுகள், அவதூறுகள் தொடர்ந்து செல்லப்பட்டு வருகிறது அது குறித்து பொருட்படுத்துவதில்லை, எனக் கூறினார்.
அண்ணாதுரை பற்றி நீங்கள் பேசியது சரி என்று சொல்கிறீர்களா என கேட்டதற்கு, அது குறித்து பேச விருப்பமில்லை என்றார். 2024 தேர்தல் எங்களுடைய கல்யாணம் எங்களுடைய தேர்தல் அதற்காக பணியாற்றுவோம். இன்று ஆளும் கட்சியாக திமுக உள்ளது அது குறித்து குறை சொல்லலாம். 1998 இல் தேசிய ஜனநாயக கூட்டணி தொடங்கப்பட்டது. அதன் தன்மை வேறுபட்ட காலங்களில் மாறி இருக்கிறது. பல கட்சிகள் வெளியில் சென்றுள்ளன, பரிணாமத்துடன் மீண்டும் வந்துள்ளனர், எனக் கூறினார்.
அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக நத்தம் விஸ்வநாதன் சொன்னது குறித்த கேள்விக்கு, யார் வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தார்கள் என்று யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது. நரேந்திர மோடி மூன்றாவது முறை வரவேண்டும் என்பதற்கான தேர்தல் இது தேர்தல் முடிவுகள் நிச்சயமாக தேசிய கூட்டணிக்கும் ஆதரவாக இருக்கும்.
திமுக மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ளது இது இரண்டுக்கும் தான் போட்டி. மத்தியில் பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்தோம் நாங்கள் செய்தததை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். திமுக செய்திருக்க கூடிய சாதனைகளை மக்கள் முன் வைக்கட்டும் நாங்களும் எங்கள் சாதனைகளை முன் வைக்கிறோம்.
2024 தேர்தல் திமுக வெர்சஸ் பாஜக தான். பாஜகவின் சண்டை திமுகவோடு யாருடன் சண்டை போட வேண்டும் என்று தெளிவாக உள்ளோம். பாஜக இன்னும் ஐந்தாண்டுகள் வேண்டுமா என்று மக்கள் முடிவு எடுக்கட்டும். பாரதிய ஜனதா கட்சி அடிப்படையில் பலத்துடன் உள்ளது 2024 தேர்தல் அதனை உறுதிப்படுத்தும், என கூறினார்.
0
0