இதுதான் முதலமைச்சர் லட்சணமா…? நரம்பில்லா நாக்கில் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா..? எச்சரிக்கை விடுக்கும் ஆர்பி உதயகுமார்..!!
Author: Babu Lakshmanan27 July 2023, 7:43 pm
எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி, நரம்பு இல்லாத நாக்காக ஸ்டாலின் அநாகரிமாக பேசுவது 2 கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்தி உள்ளது உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் வாய்க்கு வந்ததை உளறி கொட்டியுள்ளார். முதலமைச்சர் என்ற மனநிலையை மறந்து அவர் பேசுவது மக்களுக்கு கவலை அளித்துள்ளது.
ஆட்சியைப் பற்றி சாதனை சொல்ல முடியாமல் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். மணிப்பூர் சம்பவம் மிகவும் வேதனைத் தக்கது தான் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த 21 ம் தேதி எடப்பாடியார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார். ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் வைத்த கதையாக, முதலமைச்சர் பதவியை, கட்சித் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு தரம் தாழ்ந்து வார்த்தையை கொட்ட கூடாது.
இது கோபம், பொறாமை உச்சமாகும் எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், உளறல் பேச்சுகளை நிதானத்தை இழந்து பேசி உள்ளார். முதலமைச்சர் உயர்ந்த பொறுப்பு மக்களுக்கு சேவையாற்ற தான் என்பதை ஸ்டாலின் நினைத்துக் கொள்ள வேண்டும். கடந்த நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் ஆற்றிய சேவைகள், திட்டங்கள் எல்லாம் கோப்புகளை எடுத்துப் பாருங்கள். சாலைகள், கிராம இணைப்பு சாலைகள், மேம்பாட்டு பணிகள், மேம்பாலங்கள் என தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்து கொடுத்தார். நீங்கள் நடுநிலை மனதோடு ஆய்வு செய்து பாருங்கள்.
இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக, இரண்டு கோடி கழகத் தொண்டர்கள தலைவராக எடப்பாடியார் உள்ளார். முதலமைச்சர் இருந்த பொழுது குடிமராமத் திட்டம், 2.18 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, ஒரேயாண்டில் 11 மருத்துவ கல்லூரி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு, உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் இதையெல்லாம் மறக்க முடியுமா? இதையெல்லாம் நீங்கள் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது.
எடப்பாடியாரை பழிப்பதாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழித்துள்ளீர்கள். நரம்பு இல்லாத, வரவு மீறி பேசக்கூடாது. மணிப்பூர் சம்பவம் குறித்து தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. அதே போல் கனிமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மகளிர் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் பாலியல் கொலை, கொள்ளை, கொலை நடக்காத நாட்களே இல்லை. திருச்சி கூட்டத்தில் கொத்தடிமை என்று விமர்சித்து உள்ளீர்கள். இது வாபஸ் வாங்க வேண்டும்.
சர்க்காரிய ஊழலுக்காக கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தீர்கள், அது சட்டமன்ற பதிவில் உள்ளது. மேகதாது அணை குறித்து இதுவரை கர்நாடகா அரசுக்கு எந்த கண்டன அறிக்கையும் ஸ்டாலின் கொடுத்தது உண்டா? இதுதான் முதலமைச்சர் லட்சணமா?
மணிப்பூர் சம்பவம் குறித்து கொத்தடிமை என்று வாய்க்கு வந்ததை பேசியதை 2 கோடி தொண்டர்கள் மனம் புண்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் எடப்பாடியாரை நீங்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்று இரண்டு கோடி தொண்டர்கள் சார்பில் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், என கூறினார்.