மக்களின் பிரச்சனை உங்களுக்கு காமெடியா போச்சா..? . CM ஸ்டாலினுக்கு மட்டும் தானா..? ஆர்பி உதயகுமார் ஆவேசம்…!!!
Author: Babu Lakshmanan23 May 2024, 11:56 am
மழையால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுப்பு நடத்தி வரும் அரசு விரைவாக நிவாரண இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ;- தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை மழை தற்போது வரை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகி மதுரை, கன்னியாகுமரி திருநெல்வேலி,தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர்உள்ளிட்ட மாவட்டங்களின் மே 22 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: கேரளாவை புரட்டியெடுக்கும் கனமழை… 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் ; பீதியில் மக்கள்..!!!!
வெள்ளம் ஏற்பட்டு விளை பொருள்கள் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது. சேதம் அடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க உடனடி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஆகவே இந்த கணக்கெடுப்பு முடிந்து உடனடியாக, காலத்தால் செய்த உதவி என்ற அடிப்படையிலே, இந்த பயிர்கள் சேதம் அடைந்து உயிராக வளர்க்கப்பட்ட பயிர்கள் எல்லாம் வீணாகி கண்ணீரிலே இன்றைக்கு விவசாயிகள் இந்த அரசு நேசக்கரமிடுமா என்று கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். அவர்களுடைய கண்ணீரை துடைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி இருக்கிற காரணத்தினாலே முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 7 லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களும் பாசனத்திற்கும் குடிநீருக்கும் நம்பி உள்ளனர். அந்த முல்லை பெரியார் வரலாறு எல்லோரும் அறிந்து ஒன்றுதான். இருந்தபோதும் தற்போது நான் அதை நினைவு கூறுகிறேன். 1979 முன்பாக 2.31லட்சம் ஏக்கர் பாசன பரப்பு இருந்தது. கேரளா அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 136 அடியாக குறைக்கப்பட்ட பின் தற்போது பாசனத்திற்கு பரப்பு 1.71 லட்சமாக குறைந்து விட்டது.
இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். அதற்காகத்தான் நிரந்தர தீர்வுகாண வரலாற்று சிறப்புமிக்க உரிமை மீட்பு போராட்டத்தை சட்ட போராட்டத்தின் மூலம் மீட்டு தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு என்கின்ற ஒரு மகத்தான அந்த சரித்திர சாதனை நிகழ்த்திய மதுரையில் நடைபெற்றது.
20.11.2014 அம்மா பெற்ற தீர்ப்பில் அணையின் நீரை 142 அடியாக தேக்கி கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்டது 152 அடியாக தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பை பெற்று, மூன்று முறை அம்மா ஆட்சி காலத்தில் 142 அடியாக தேக்கி அணை பாதுகாப்பாக என்று உறுதி செய்யப்பட்டது
இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாரில் 1500 கோடியில் புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டம் தயாரித்த போது, இதன் மூலம் நமது ஜீவாதார உரிமை பறிபோகும். அதே போல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட மக்களின் சார்பில் தொடர்ந்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதம் நடைபெற்றன. ஆனாலும் நமது உரிமை பறிபோகிறது. அரசு கள்ள மவுனதுடன் இருக்கிறது. இந்த மர்மத்தின் விடை எப்போது உலகம் அறியும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அமராவதி பிரச்சனை, பாலாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எடப்பாடியாரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். எந்த அளவுக்கு இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் காட்டுகிறார்கள் என்பதை அந்த பதிவிலே நாம் அறிகிற போது, இதை நீர்வளத்துறை அமைச்சர் எப்போதும் போல இதை நகைச்சுவையாக பதில் சொல்லி கடந்து செல்கிறார்.
நாட்டு மக்களுடைய ஜீவாதார உரிமை பிரச்சினைகளை மிகுந்த அக்கறையோடு கவனத்தோடு கையாள வேண்டும், உரிமை நிலை நாட்ட வேண்டும் என்றுதான் மக்கள் கேட்கின்றார்கள். ஆகவே இந்த கோடை மழையிலே இதுவரை 12 பேர் உயிரிழந்தவர்கள் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதேபோல கால்நடைகள் ,பயிர்கள் சேதாரம் ஏற்பட்டிருக்கின்றது. போர்க்கால அடிப்படையிலே இந்த மானியங்களை, நிவார நிதிகளை, இழப்பீடுகளை தர வேண்டும்.
முல்லைபெரியாரில் மௌனம் சாதித்து வரும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள் குரல் வேதனைகுரலாக கேட்டுக் கொண்டிருப்பது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மட்டும் கேட்கவில்லையா? என கேள்வி எழுப்பினார்.