மக்களாட்சி முகமூடிக்குள் மன்னராட்சி… துரோகிகளையும், எட்டப்பர்களையும் வீழ்த்தும் வரை உறங்கக் கூடாது ; ஆர்பி உதயகுமார் சூளுரை
Author: Babu Lakshmanan13 January 2024, 11:04 am
மக்களாட்சி என்ற முகமூடிக்குள்ளே மன்னர் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்ற குடும்பஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- திமுக அரசின் அதிகார துஷ்பிரோயகம், நில அபகரிப்பு, மின்சார கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சாக்கடை வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என்று விண்ணை முட்டுகிற அளவிலே விலைவாசி உயர்ந்திருக்கிற காரணத்தினாலே, மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனையோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, சாமானியராக பொது வாழ்க்கையில தன்னை இணைத்துக் கொண்டு புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரின் தலைமையிலே 50 ஆண்டுகாலம் காலம் தன்னுடைய உழைப்பால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய மாபெரும் மக்கள் இயக்கத்தினுடைய கழகத்தின் நிரந்தர பொது செயலாளராக, ஆளுகிற சர்க்கார் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சிம்ம சொப்பனமாக மன உறுதியோடு நிர்வாக குளறுபடிகளை தோலுரித்துக் காட்டி வருகிறார்.
ஆனால் திமுக பீடீமாக இருந்து கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி போனால் நமக்கு என்ன, இரட்டை இலை சின்னம் எப்படி போனால் நமக்கு என்ன, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பட்டொளி வீசி பறக்கின்ற கொடி எப்படி போனால் நமக்கு என்ன, நம்முடைய சுயநலமே முக்கியம் என்று சில எட்டப்பர்கள் வேலை செய்கிற காரணத்தினால், இன்னைக்கு எடப்பாடியாருக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டாலும் கூட தன்னுடைய மதிநுட்பத்தால், நிர்வாக திறமையினாலே, மிகச் சிறந்த ஆளுமையினாலே, அதை அவர் கடந்து செல்கின்றார்.
இந்த தை நாளில் நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்காக இன்றைக்கு அவதரித்திருக்கிற எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும்.
எடப்பாடியாரின் தலைமையில் மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மக்களாட்சி மலர வேண்டும். இன்றைக்கு எங்கே மக்களாட்சி இருக்கிறது. இங்கே மறைமுகமாக மன்னராட்சி மலர்ந்திருக்கிறது.
இன்றைக்கு மன்னர் ஆட்சியிலே தான் தந்தை, தாத்தா, பேரன், கொள்ளுப்பேரன் என்று அரசியல் அதிகாரம் கைமாறிக் கொண்டே போகிறது. மக்களாட்சி என்ற முகமூடிக்குள்ளே மன்னர் ஆட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அம்மாவின் புண்ணியத்தாலே நாமெல்லாம் இன்றைக்கு பொது வாழ்க்கையில் அடையாளம் காணப்பட்டு உள்ளோம். இரண்டு பேர் கை எடுத்து நம்மை கும்பிடுகிறார் என்று சொன்னால் புரட்சித்தலைவி அம்மாவால்தான். அவரின் கனவை நனைவாக்க வேண்டும். அந்த தாய் உயிரை கொடுத்து இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார். அதை பாதுகாக்க வேண்டும்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிகப்பெரிய அரசியல் பின்புலத்தில், மிகப்பெரிய பொருளாதார பலம் வந்தவர். அந்த ஆளுமையை எதிர்த்து இன்றைக்கு ஒவ்வொரு நாளும் எடப்பாடியார் போராடிக் கொண்டிருக்கிறார். சாமானியர் கையிலே ஆட்சி அதிகாரம் என்பது தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், அம்மா ஆகியோர் கண்ட கனவு அதை நனைவாக்க எடப்பாடியார் உழைத்து வருகிறார். அதற்கு ஊரு விளைவிக்கின்ற எட்டப்பர்களை நாம் ஒருநாளும் ஆதரிக்கக் கூடாது.
அவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சுயநலத்தின் மொத்த உருவமாக, தான் பெரிது, தனக்கு பதவி தான் பெரிது, தனக்கு பதவி இல்லை என்று சொன்னால் தனக்கு பதவி கொடுத்து அழகு பார்த்து அந்த இயக்கத்தையும் அழிக்க துடிப்பவர்களின் உண்மை சுயரூபத்தை உலகறிய செய்கின்ற அந்த தியாக வேள்விலே அனைத்திந்திய அண்ணாதிமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும்
அம்மா அவர்களுடைய மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை ராணுவ இயக்கமாக உருவாக்கி 2 கோடியே 20 லட்சம் தொண்டர்களை உருவாக்கி, 68,000க்கு மேற்பட்ட பூத் கமிட்டிகளை உருவாக்கி சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளார்.
எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர கழகத் தொண்டர்கள் மக்களிடத்தில் உண்மையை எடுத்துக் கூறி மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்ய துரோகிகளையும், எதிரிகளையும் எட்டப்பர்களையும் வீழ்த்தும்வரை நாம் உறங்க கூடாது எனக் கூறினார்.